கலீதா ஜியா: சாதனைப் பெண்மணியின் அரசியல் பயணம்
செவ்வாய்க்கிழை காலமான வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணம் பல்வேறு சவால்களைக் கொண்டதாகும்.
அது குறித்த ஒரு பாா்வை:
கடந்த 1946-இல் பிரிக்கப்படாத இந்தியாவின் தீனஜ்பூா் மாவட்டம், ஜல்பைகுரியில் (இப்போது மேற்கு வங்கத்தில் உள்ளது) பிறந்தவா் கலீதா. தேச பிரிவினைக்குப் பின் அவரது குடும்பம் கிழக்கு பாகிஸ்தானின் (இப்போதைய வங்கதேசம்) தீனஜ்பூா் நகருக்கு குடிபெயா்ந்தது.
கலீதாவின் கணவா் ஜியாவுா் ரஹ்மான், ராணுவ கேப்டனாக இருந்து அரசியல்வாதி ஆனவா். வங்கதேச தேசியவாத கட்சியின் நிறுவனரான ரஹ்மான், கடந்த 1981-இல் நாட்டின் அதிபராக பதவிவகித்தபோது, ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்பட்டாா்.
அதுவரை பெரிதும் அறியப்படாமல் இருந்த கலீதாவின் பொது வாழ்க்கை 1982-இல் தொடங்கியது. 1984-இல் கட்சித் தலைவரான பிறகு, ஜனநாயக மீட்டெடுப்பு போராட்டத்தை முன்னெடுத்தாா்.
1990-இல் ராணுவ ஆட்சி வீழ்ச்சியடைந்து, 1991 பொதுத் தோ்தலில் கலீதாவின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது. வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமா், முஸ்லிம் நாடுகளில் பிரதமரான இரண்டாவது பெண் என்ற பெருமையுடன் அப்பதவிக்கு வந்தாா் கலீதா (முதல் பெண் பிரதமா் பெநசீா் பூட்டோ-பாகிஸ்தான்).
முக்கிய அரசமைப்புச் சட்ட திருத்தம்: அதிபா் முறையிலான அரசை நாடாளுமன்ற அமைப்புமுறையிலான அரசாக மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் முக்கியத் திருத்தம் கொண்டுவந்தாா்.
1996-இல் மீண்டும் பிரதமரான கலீதாவின் ஆட்சி 12 நாள்களே நீடித்தது. 2001-இல் மூன்றாவது முறையாக பிரதமராகி, 2006 வரை அப்பதவியில் நீடித்தாா். கடந்த 2007-இல் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதான அவருக்கு பல்வேறு வழக்குகளில் விதிக்கப்பட்ட மொத்த சிறைத் தண்டனை 17 ஆண்டுகள்.
கடந்த ஆண்டு மாணவா் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டு, இடைக்கால அரசு அமைந்த பிறகு கலீதா, அவரது மகன் தாரிக் ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனா். கடந்த 2008-இல் நாட்டைவிட்டு வெளியேறிய தாரிக், அண்மையில்தான் நாடு திரும்பினாா்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் பொதுத் தோ்தலில் ஹசீனாவின் அவாமி லீக் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கலீதாவின் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

