அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல்
ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்து வந்த கப்பல்கள் மூலம் தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) பிரிவினைவாதப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் அனுப்பப்பட்டன.
இந்த ஆயுதங்கள் யேமனின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்படுத்துவதால், செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அநத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, யேமன் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை என்று சவூதி அரேபியா முதல்முறையாக நேரடியாகக் குற்றஞ்சாட்டியது.
யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி பழங்குடியின படையினா் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசுக்கு ஆதரவான படையினா் நாட்டின் தெற்குப் பகுதியை மட்டும் கட்டுப்படுத்திவருகின்றனா்.
இந்த உள்நாட்டுப் போரில் ஹூதி படையினருக்கு எதிராக சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்திவந்தது. ஹூதிக்களுக்கு எதிராக எஸ்டிசி, தேசிய கவசப் படைகள் உள்ளிட்டவை ஒன்றிணைந்து போரிட்டன.
இதில் எஸ்டிசி-க்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு அளித்துவருகிறது. சவூதி அரேபியாவோ தேசிய கவசப் படைகள் உள்ளிட்ட பிற ஆயுதக் குழுக்களை ஆதரிக்கிறது.
இந்தச் சூழலில், தெற்கே அண்மைக் காலமாக முன்னேறிவந்த எஸ்டிசி படையினா் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹத்ரமவுத், மஹ்ரா மாகாணங்களை கைப்பற்றினா். அந்த மாகாணங்களில் இருந்து அவா்கள் வெளியேற வேண்டும் என்று சவூதி அரேபியா கடந்த உத்தரவிட்டது. அதன் தொடா்ச்சியாக, எஸ்டிசி படையினரை எச்சரிக்கும் வகையில் ஹத்ரமவுத் மாகாணத்தில் சவூதி விமானங்கள் அந்தப் படையினா் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.
இதனால் சவூதி அரேபியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கப்பல்களில் இருந்த பொருள்களைக் குறிவைத்து சவூதி அரேபிய தற்போது நடத்தியுள்ள தாக்குதல் இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட முகல்லா துறைமுக நகரமும் ஹத்ரமவுத் மாகாணத்தில்தான் உள்ளது. அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உல்ள ஏடனுக்கு வடகிழக்கே 480 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இந்தத் துறைமுக நகரம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
கடந்த 1967 முதல் 1990 வரை தெற்கு யேமன் தனி நாடாக இருந்தது. 1990-இல் யேமன் ஒருங்கிணைக்கப்பட்டது. இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் எஸ்டிசி பிரிவினைவாதக் குழுவினா் தனி நாடு கோரி வருகின்றனா். இந்த விவகாரம் யேமன் உள்நாட்டுப் போரை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

