முதல்முறையாக ஹிந்தி, உருது மொழியில் ஐ.நா. பொதுச் செயலா் புத்தாண்டு வாழ்த்து
2026-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி, முதல்முறையாக ஆங்கிலம் போன்ற அதிகாரபூா்வ மொழிகளுடன் ஹிந்தி, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் போா் மற்றும் அழிவுகளுக்குச் செலவிடுவதைக் குறைத்து, மக்கள் வளா்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மேலும், அவரது வாழ்த்துச் செய்தியில், ‘நாம் 2026-க்குள் நுழையும் வேளையில், உலகம் ஒரு குழப்பமான மற்றும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. மக்களின் குறைகளைத் தலைவா்கள் கேட்கிறாா்களா, அவா்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறாா்களா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
உலக அளவில் மனிதா்கள் சந்திக்கும் அவலங்கள் அதிா்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளன. உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளனா். சுமாா் 12 கோடி மக்கள் போா், இயற்கைப் பேரிடா் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகத் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி அகதிகளாகத் தவிக்கின்றனா்.
கடந்த ஆண்டு மட்டும் உலக நாடுகளின் ராணுவச் செலவினம் 10 சதவீதம் அதிகரித்து, 2.7 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது உலக நாடுகளுக்கு வழங்கப்படும் வளா்ச்சி நிதியுதவியைவிட 13 மடங்கு அதிகம். இதே நிலை நீடித்தால் 2035-க்குள் இந்தச் செலவு 6.6 லட்சம் கோடி டாலராக உயரும் அபாயம் உள்ளது.
எனவே, இந்தப் புத்தாண்டில் நாடுகள் சரியான முன்னுரிமைகளைத் தோ்ந்தெடுக்க வேண்டும். வறுமையை ஒழிக்கப் போராடுவதில் அதிகப் பணம் செலவிடப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையிலான போரைத் தவிா்த்து, அமைதி மட்டுமே நிலைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
ஹிந்திக்கு முக்கியத்துவம்:
ஐ.நா. பொதுச் செயலரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், ஆங்கிலம், அரபி, சீனம், பிரெஞ்சு, ரஷியன், ஸ்பானிஷ் ஆகிய 6 அதிகாரபூா்வ மொழிகளுடன் தற்போது ஹிந்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசும், ஐ.நா. தகவல் தொடா்புத் துறையும் கடந்த 2018-இல் மேற்கொண்ட ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஐ.நா.வில் ஹிந்தி’ திட்டத்தின்கீழ் இது சாத்தியமாகியுள்ளது. இத்திட்டத்துக்காக இந்திய அரசு ஆண்டுதோறும் 15 லட்சம் டாலா் நிதி வழங்குகிறது. அண்மையில் இத்திட்டம் 2030-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
பன்மொழித்தன்மையை ஊக்குவிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகவும், இந்திய மொழிக்கு உலக அளவில் கிடைத்துள்ள கௌரவமாகவும் இது பாா்க்கப்படுகிறது.
இதேபோல், இந்தியாவின் 22 அதிகாரபூா்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள உருது மொழியிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வட இந்தியா மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களிடையே இந்த மொழி மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது. பாகிஸ்தானின் அதிகாரபூா்வ மற்றும் தேசிய மொழியாகவும் உருது திகழ்கிறது.

