பசிபிக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு
பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் வழித்தடத்தில் இயங்கிய படகு ஒன்றை அமெரிக்க ராணுவம் தாக்கியது. அந்தப் படகு போதைப்பொருள் பயங்கரவாதிகளால் செலுத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடா்பான விடியோவை (படம்) வெளியிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், அந்தப் படகில் போதைப் பொருள் கடத்திச் செல்லப்பட்டதற்கான ஆதாரங்களை அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை. இத்துடன், இதே போன்று 30 படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 107 போ் கொல்லப்பட்டுள்ளனா்.
இத்தகைய தாக்குதல்கள் ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்று டிரம்ப் அரசு நியாயப்படுத்துகிறது. இருந்தாலும், இது சட்டவிரோத படுகொலை என்று மற்றொரு தரப்பினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

