

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில், 2025 ஆம் ஆண்டு முடிந்து 2026 ஆம் ஆண்டு பிறந்தது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில், பல நகரங்களில் டிசம்பர் 31 ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன.
2025 ஆம் ஆண்டு முடிந்து 2026 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது.
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி புதன்கிழமை மாலை 4.40 மணிக்கு, நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். உலக நேரக் கணக்கின்படி, கிரிபாட்டி தீவுக்கு அடுத்த நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் நாட்டின் உயரமான கோபுரமான ஆக்லாந்தில் அமைந்துள்ள ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சுமார் 18 லட்சம் பேர் வசிக்கும் ஆக்லாந்தில் நியூ யார்க்கில் நேரத்துக்கு சுமார் 18 மணி நேரத்துக்கு முன்பாகவே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
சுமார் 240 மீட்டர் உயரம் கொண்ட ஸ்கை டவரில் இருந்து 3500 வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
நியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதிகளில் இரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்த 2 மணி நேரம் கழித்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டின.
சிட்னியின் போண்டி கடற்கரையில் டிசம்பர் 13 ஆம் தேதி யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தபோது துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் பலியாகினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சிட்னி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.