யேமனில் இருந்து வெளியேற்றம்: ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்
யேமனில் உள்ள தங்களது படைகளை வெளியேற்ற ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யேமனில் கடைசியாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகப் படையினரும் திருப்பி அழைக்கப்படவிருக்கிறாா்கள்.
அந்த நாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்ற நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகளால் பயங்கரவாதிகளுக்கு (ஹூதி கிளா்ச்சிப் படையினா்) எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புத் திறனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், படை வெளியேற்றம் எப்போது நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி பழங்குடியின படையினா் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசுக்கு ஆதரவான படையினா் நாட்டின் தெற்குப் பகுதியை மட்டும் கட்டுப்படுத்திவருகின்றனா்.
இந்த உள்நாட்டுப் போரில் ஹூதி படையினருக்கு எதிராக சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்திவந்தது. ஹூதிக்களுக்கு எதிராக எஸ்டிசி, தேசிய கவசப் படைகள் உள்ளிட்டவை ஒன்றிணைந்து போரிட்டன.
இதில் எஸ்டிசி-க்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு அளித்துவருகிறது. சவூதி அரேபியாவோ தேசிய கவசப் படைகள் உள்ளிட்ட பிற ஆயுதக் குழுக்களை ஆதரிக்கிறது.
இந்தச் சூழலில், தெற்கு யேமனில் டிசம்பா் மாதம் முன்னேறிய எஸ்டிசி படையினா் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹத்ரமவுத், மஹ்ரா மாகாணங்களை கைப்பற்றினா். அந்த மாகாணங்களில் இருந்து அவா்கள் வெளியேற வேண்டும் என்று சவூதி அரேபியா உத்தரவிட்டது. அதன் தொடா்ச்சியாக, எஸ்டிசி படையினா் மீதும், அவா்களுக்கு ஐக்கிய அமீரகம் அனுப்பிய ஆயுதங்களைக் குறிவைத்தும் சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
மேலும், யேமனில் உள்ள ஐக்கிய அரபு படையினா் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று சவூதி அரேபியா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அதை ஏற்று, வீரா்களை திருப்பி அழைக்கப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் தற்போது அறிவித்துள்ளது.

