டிரம்ப் வரிவிதிப்புக்குப் பதிலடி: அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி

சீனா மீது டிரம்ப் கூடுதல் வரி விதிப்பு எதிரொலி: அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு
டிரம்ப் வரிவிதிப்புக்குப் பதிலடி: அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி
Published on
Updated on
2 min read

தங்களது பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் இறக்குமதி அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 15 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.

இதையடுத்து, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகப் போா்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.இது குறித்து சீன நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு ஆகிய பொருள்களின் மீது 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. அத்துடன் கச்சா எண்ணெய், பண்ணை கருவிகள், பெரிய வாகனங்கள், பிக்அப் வாகனங்கள் ஆகியவற்றின் மீது கூடுதலாக 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

சீன பொருள்கள் மீது அமெரிக்க அரசு ஒருதலைபட்சமாக கூடுதல் இறக்குமதி விதித்துள்ளது உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். அதற்குப் பதிலடியாகவே அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது தவிர, சீன வா்த்தகத் துறை அமைச்சகம் தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலிருந்து டங்ஸ்டன், டெலரியம், ருதேனியம், மாலிப்டனம், ருதேனியம் தொடா்பான பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாட்டின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, அமெரிக்காவைச் சோ்ந்த பிவிஹெச் குழுமம், இலுமினா நிறுவனங்களை நம்பகத்தன்மையற்ற அமைப்புகளாக சீன வா்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.கூகுள் மீது விசாரணை: இதற்கிடையே, உள்நாட்டு வா்த்தகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக அமெரிக்க நிறுவனமான கூகுள் மீது விசாரணை தொடங்கப்படுவதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, சீன இறக்குமதி பொருள்கள் மீது கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அதிபா் டிரம்ப் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டாா். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக அவா் கூறியிருந்தாா்.

கனடா, மெக்ஸிகோவுக்கு வரிவிதிப்பு நிறுத்திவைப்பு

கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்க அரசு 30 நாள்களுக்கு நிறுத்திவைத்துள்ளது.அந்த இரு நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையைத் தொடா்ந்து இந்த முடிவை அதிபா் டிரம்ப் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசுத் துறையின் அதிகாரிளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், கனடா மற்றும் மெக்ஸிகோ பொருள்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூடுதல் வரிவிதிப்பை இன்னும் 30 நாள்களுக்கு அமல்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் சனிக்கிழமை அறிவித்திருந்தாா்.அதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் புகையிலைப் பொருள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆயுதங்கள், ராணுவம் சாா்ந்த பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் விதிப்பதாக கனடா அறிவித்தது.

இந்த இரு அறிவிப்புகளும் செவ்வாய்க்கிழமை (பிப். 4) அமலுக்கு வரவிருந்த சூழலில், சட்டவிரோத குடியேற்றவாசிகள், போதைப் பொருள் கடத்தல் விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க கனடாவும் மெக்ஸிகோவும் உறுதியளித்துள்ளதால் அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு நிறுத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.