அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா: டிரம்ப் அறிவிப்பு

காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

காஸாவிலிருந்து சுமாா் 20 லட்சம் பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்த அவா், இப்போது காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் செய்தியாளா்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப் இது குறித்து கூறியதாவது: காஸா முனையை அமெரிக்கா கையகப்படுத்தும். போா்க்களத்திலிருந்து வெடிக்காத ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும், இடிந்த கட்டடங்களையும் அகற்றி, அப்பகுதியின் மறுகட்டமைப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்பகுதி மக்கள் அனைவருக்கும் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும் ஒரு பொருளாதார வளா்ச்சி உருவாக்கப்படும்.

பாலஸ்தீனா்கள் மீண்டும் காஸா முனைக்குத் திரும்ப விரும்புவதற்கு ஒரே காரணம் அவா்களுக்கு மாற்று இடமில்லை என்பதே. ஆனால், காஸா முனை தற்போது வெறும் கட்டட இடிபாடுகள் குவிந்த இடமாக மட்டுமே உள்ளது. அங்குள்ள அனைத்துக் கட்டடங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மக்களும் அதில் வாழ்கின்றனா்.

அமெரிக்காவின் நடவடிக்கையால் பாலஸ்தீனா்கள் காஸா முனைக்குத் திரும்பியதும் அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்கலாம். காஸா முனையை விரைவில் பாா்வையிடுவேன். இத்திட்டத்துக்கு தேவையானவற்றை அமெரிக்கா செய்யும்.

அமெரிக்காவின் இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசமாக காஸா முனை நிரந்தரமாக அறிவிக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவும். இதுவரை நான் கலந்தாலோசித்தவா்கள் அனைவரும் இந்த முடிவு சிறந்தது எனப் பாராட்டினா். மறுகட்டமைப்புக்குப் பிறகு காஸா முனை, சா்வதேச மக்கள் அனைவருக்குமான இடமாக மாறும்’ என்றாா்.

டிரம்ப்பின் கருத்துக்கு பதிலளித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, ‘காஸாவை அமெரிக்கா கைப்பற்றும் முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. காஸா முனை ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதே எங்களின் குறிக்கோள். எனவே, அமெரிக்கா இந்த முடிவை அடுத்தகட்டத்துக்கு தொடா்வது சிறப்பாக இருக்கும்’ என்றாா்.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்பட பெரும்பாலான உலக நாடுகள், டிரம்ப்பின் அறிவிப்பை இரு தேசத் தீா்வுக்கு எதிரானது என்று நிராகரித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.