அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் AP

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!

பிணைக் கைதிகளை ஹமாஸுக்கு டிரம்ப் கெடு விதித்திருப்பது பற்றி...
Published on

காஸாவில் இருந்து மீதமுள்ள பிணைக் கைதிகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

இல்லையெனில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வந்தது. அமெரிக்கா, கத்தாா் மற்றும் எகிப்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கடந்த மாதம் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக தற்போது 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் என 33 பிணைக் கைதிகளைப் படிப்படியாக ஹமாஸ் அமைப்பும், சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்து வருகின்றன.

இரண்டாவது கட்டத்தில் ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள அனைவரையும் விடுவிப்பார்கள். பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் கூடுதலாக விடுவிக்கும். காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது:

"ஹமாஸால் விடுதலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட பலர் ஏற்கெனவே உயிரிழந்திருக்க கூடும் என்ற அச்சம் உள்ளது. வருகின்ற சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.

இல்லையென்றால், அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வந்துவிடும். சிறிது சிறிதாக அல்ல, பெரிதளவிலான தாக்குதல் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை நேரில் சந்தித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, காஸாவை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com