கனடா (கோப்புப்படம்)
கனடா (கோப்புப்படம்)AP

கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?

கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விசா விதிமுறைகள் பற்றி..
Published on

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் உள்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிதாக கனடாவுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் குடியேற நினைப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகள்

கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா நிலையை, எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரத்தை கனடா எல்லைப் படை அதிகாரிகளுக்கு தடையற்ற அதிகாரங்களை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் கீழ், மின்னணு விசா, தற்காலிக தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ நிராகரிக்கவோ கனடா எல்லைப் படைக்கு தற்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் விசா காலம் நிறைவடைந்த பிறகும் அவர் நாட்டைவிட்டு வெளியேறமாட்டார் என்று கனடா அதிகாரி நினைத்தால், அவரது விசா காலம் முடியும் முன்பே ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு பாதிப்பு

இந்திய மாணவர்கள் மற்றும் சட்டப்பூர்வமாக குடியேறுபவர்களுக்கு கனடா மிகவும் விருப்பமான இடங்களில் ஒன்றாகும். தரவுகளின்படி, தற்போது கனடாவில் உயர்க்கல்வி படித்து வரும் இந்திய மாணவர்கள் மட்டும் 4.2 லட்சத்துக்கும் அதிகம்.

மேலும், தற்காலிக தங்கும் விசாவை பெற்று இந்தியாவைச் சேர்ந்த பலரும் கனடாவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். 2024 முதல் பாதியில் மட்டும் 3.6 லட்சம் இந்தியர்களுக்கு பயண விசாவை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள், சட்டப்பூர்வமாக குடியேறியவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கனடாவைவிட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே பிரச்னை நிலவி வரும் சூழலில், புதிய விசா விதிமுறைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் இந்தியர்களிடையே நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com