ஜில் பைடனுக்கு மோடி அளித்த வைரம்தான் காஸ்ட்லி பரிசு! ரூ. 17 லட்சம் மதிப்பு!

ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி அளித்த வைரம், மிகக் காஸ்ட்லியான பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அளித்த பரிசுகள்
மோடி அளித்த பரிசுகள்
Published on
Updated on
2 min read

கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கு, வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுப் பொருள்களிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான வைரம்தான் மிக விலைமதிப்புள்ள பரிசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவி பெற்ற பரிசுப் பொருள்களின் விவரங்களை அந்நாட்டின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ. 17 லட்சம் (20 ஆயிரம் டாலர்) மதிப்புள்ள 7.5 காரட் வைரம்தான், ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில், உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடையிலும் அணிந்துகொள்ளும் $14,063 டாலர் மதிப்புள்ள நகை இடம்பிடித்துள்ளது. அடுத்து, எகிப்து நாட்டு அதிபரும், அவரது மனைவியும் இணைந்து ஜில் பைடனுக்கு அளித்த கைசெயின், ப்ரூச், மிகச் சிறப்பான புகைப்பட ஆல்பம் ஆகியவை $4510 டாலர் மதிப்புடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் அதிபர் ஜோ பைடன் பெற்ற பரிசுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென் கொரியாவின் அதிபராக இருந்த சுக் யோல் யூன் அளித்த $7,100 மதிப்புமிக்க புகைப்பட ஆல்பம், மங்கோலிய பிரதமர் அளித்த $3495 மதிப்புள்ள மங்கோலிய போர் வீரர்களின் சிலைடி, புரூனே மன்னர் அளித்த $3,300 மதிப்புள்ள வெள்ளிக் கிண்ணம் ஆகியவையும் முன்னிலை வகிக்கின்றன.

பிரதமா் நரேந்திர மோடி-அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.
பிரதமா் நரேந்திர மோடி-அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணமும் பரிசும்

கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் ஜோ பைடனுக்கு வெள்ளி விநாயகா் சிலை, விளக்கையும், அவரின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்தையும் நினைவுப் பரிசாக வழங்கியிருந்தார்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், மனைவி ஜில் பைடன் அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, இருவருக்கும் பிரதமா் மோடி நினைவுப் பரிசுகளை வழங்கியிருந்தார்.

சந்தனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட வெள்ளி விநாயகா் சிலை, விளக்கு ஆகியவற்றை அதிபா் பைடனுக்கு அவா் பரிசளித்தாா். மேலும், 80 வயதை எட்டியவா்கள் தானம் வழங்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் ‘தசதானத்தையும்’ அதிபா் பைடனுக்குப் பிரதமா் மோடி பரிசளித்தாா். 80 ஆண்டுகளும் 8 மாதங்களும் வாழ்ந்தவா்கள் ஆயிரம் பௌா்ணமிகளைக் கண்டவா்களாக அறியப்படுவாா்கள். அதிபா் பைடன் இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த மாதம் அந்த வயதை எட்டவிருப்பதைக் குறிக்கும் வகையில், இத்தகைய நினைவுப் பரிசைப் பிரதமா் மோடி வழங்கியதாகக் கூறப்பட்டது.

அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 காரட் மதிப்புகொண்ட வைரத்தை பிரதமா் மோடி பரிசளித்திருந்தார். அந்த வைரம் இந்தியாவில் உருவாக்கப்பட்டதும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமாகும். இந்தியா 75-ஆவது சுதந்திர ஆண்டை அண்மையில் கொண்டாடியதை நினைவூட்டும் வகையில் 7.5 காரட் மதிப்புடன் அந்த வைரம் உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதிபா் பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோா் சாா்பில் பிரதமா் மோடிக்கு பழங்கால அமெரிக்கன் கேமரா, அமெரிக்க வன உயிரினங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு, புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞா் ராபா்ட் ஃபிராஸ்டின் கவிதைகள் அடங்கிய புத்தகத்தின் முதல் பதிப்பு உள்ளிட்டவை நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com