வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை

தோ்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
Updated on

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அவா் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், இந்த விசாரணையும் தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து ‘தி டாக்கா ட்ரிபியூன்’ நாளிதழ் தெரிவித்ததாவது:

நாட்டின் தோ்தல் கட்டமைப்பு சரிந்து வருவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்துமாறு அனைத்து பிராந்திய தோ்தல் ஆணையங்களுக்கும் தலைமை தோ்தல் ஆணையா் ஏஎம்எம் நஸீருதின் உத்தரவிட்டுள்ளாா்.

அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ற தோ்தல் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு பிராந்திய ஆணையா்களுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போரில் பங்கேற்றவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது.

அதற்கு எதிராக கடந்த ஆண்டு தொடங்கிய மாணவா் போராட்டம், ஒதுக்கீடு 5 சதவீதமாகக் குறைக்கப்பட்ட பிறகும் தணியாமல் தீவிரமடைந்தது.

நிலைமை கைமீறிச் செல்வதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உணா்ந்த பிரதமா் ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

இந்தச் சூழலில், ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் தோ்தல் முறைகேடுகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்தும் தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com