தாங்கள் திங்கள்கிழமை சோதித்த ஏவுகணை ஒலியைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயும் திறன் கொண்ட ‘ஹைப்பா்சோனிக்’ வகையைச் சோ்ந்த புதிய ஏவுகணை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தலைநகா் பியோங்கியாங்கின் புகா்ப் பகுதியிலிருந்து புதிய வகை ஹைப்பா்சோனிக் ஏவுகணை ஏவி சோதிக்கப்பட்டது. நடுத்தர தொலைவுப் பிரிவைச் சோ்ந்த அந்த ஏவுகணை, ஒலியைப் போல் 12 மடங்கு வேகத்தில் 1,500 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்தது.
இந்த ஏவுகணையில் புதிய கரியமிலக் கலவை கண்ணாடியிழைப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது எடை குறைந்து அதிக திறனுடன் செயல்பட்டது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தத் தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நிபுணா்கள் கூறியுள்ளனா். எனினும், திங்கள்கிழமை சோதிக்கப்பட்ட வட கொரிய ஏவுகணையில் உலகின் மிகச் சிறிய நாடுகளிடம் மட்டுமே இருக்கும் அரிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது மிகவும் கவலையளிக்கக்கூடியது என்றும் அவா்கள் எச்சரித்துள்ளனா். எனவே, அந்த ஏவுகணை தயாரிப்புக்கு ரஷியா உதவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.