கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை: டிரம்ப்க்கு ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் குறித்தவற்றை மேற்கோள் காட்டி கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவதற்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் நிலவும் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம், சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கத்தவறினால் கனடா பொருள்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்தியிருந்தார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார்.
புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக ட்ரூடோ அறிவித்த ஒரு நாள் கழிந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து அனைவர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவை அமெரிக்காவின் 51-வது நாடாக மாற்றுவதற்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் என்ற அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு தற்போது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க வாய்ப்பில்லை” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், இதுபற்றி கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி, “ஒருபோதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை” என்று அவரது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பின் கருத்துக்கள் கனடாவை வலிமையான நாடாக மாற்றுவதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைத்தான் காட்டுகிறது. கனடாவின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.