இந்தியாவுக்குள் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றுக்குக் குறுக்கே உலகிலேயே மிகப்பெரிய அணையைக் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டிருப்பது, எல்லையில் அமைதி, ஆற்றில் போர் என்ற தந்திரமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சுமாா் ரூ.11.17 லட்சம் கோடி செலவில், உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
இமயமலை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசத்துக்குள்ளும், பின்னா் வங்கதேசத்துக்குள்ளும் பிரம்மபுத்திரா ஆறு பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில்தான் அணை கட்டப்பட உள்ளது என்பது, மிகப்பெரிய புவியியல் மாறுபாட்டை ஏற்படுத்ததலாமோ, அதனால் இயற்கைப் பேரிடர் நேரிடுமோ என பல்வேறு ஐயங்களையும் எழுப்புகிறது.
அணை கட்ட திட்டமிட்டிருக்கும் பகுதிக்கு அருகே, இந்த வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், இந்தியாவின் அச்சத்தை அதிகரிக்கவே செய்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் ஒருமுறை பேசுகையில், "குடிநீருக்குத்தான் கடுமையான போட்டி இருக்கும், எதிர்காலத்தில் இந்த குடிநீரே, மோதல் மற்றும் போர்களுக்குக் காரணமாக அமையும் என்று கூறியிருந்தார்.
அவர் என்னவோ, வருங்காலத்தைக் கணித்துத்தான் கூறியிருந்தார். ஆனால், அவர் சொன்னதை போர் உக்தியாக மாற்றுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அணையை மூடினால், இந்தியாவில் பிரம்மபுத்திராவுக்குக் குறுக்கே அணை கட்டி அதனை மூடிவிட்டால், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வறட்சி, அணையை திறந்தால் வெள்ளம் என்ற நிலையை உருவாக்க சீனாவால் முடியும் என்கின்றன தரவுகள்.
இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சுமாா் ரூ.11.17 லட்சம் கோடி செலவில், உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
இந்தியா - சீனா இடையே ஏற்கனவே பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய பாலத்தைக் கட்டுவதற்கு சீன அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பு, சீனத்தில் மிகப்பெரிய வளைவில் பயணித்து நாட்டுக்குள் நுழைகிறது. இங்குதான் மிகப்பெரிய மின்உற்பத்தி திறன் கொண்ட அணையை அமைக்க திட்டமிட்டுள்ளது சீனா.
ஆனால், இந்த அணை கட்டப்பட்டால், இந்தியா மற்றும் வங்கதேசத்துக்குள் பாயும் நீர் தடைபடும் என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், சீனா கட்ட உத்தேசித்துள்ள அணைப் பகுதியை இந்தியா தொடர்ந்து கண்காணிக்கும், நமது நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆனால், இந்த அணை கட்டப்படுவதன் பின்னணியில், மிகப்பெரிய நிலச்சரிவு அபாயம் ஏற்படுத்துவதும், இந்தியாவுக்குள் வறட்சி அல்லது வெள்ளத்தை ஏற்படுத்தும் நோக்கமும் இருக்கலாம் என்றே ஆரம்பம் முதல் இந்திய நிபுணர்கள் எச்சரிக்கை ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசு உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிமை தெரிவித்திருந்தார்.
இந்த வாரம் திபெத்தில் நேரிட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தில் 126 பேர் பலியானார்கள். இந்த சம்பவம், அப்பகுதி, நிலநடுக்கத்தால் பாதிக்கும் அபாயம் கொண்ட இடமாக இருப்பதையே உணர்த்துகிறது. அதுபோன்ற ஒரு இடத்தை சீனா, உலகிலேயே மிகப்பெரிய அணை கட்ட தேர்ந்தெடுத்திருப்பதில் எப்படி நல்ல உள்நோக்கம் இருக்கும் என்று கருத முடியும் எனவும் கேள்விகள் எழுகின்றன.