லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு..!

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: பாதிப்பால் உயிரிழப்பு 24-ஆக உயர்வு!
மேண்டெவில் கேன்யான் | பாலிசேட்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ்
மேண்டெவில் கேன்யான் | பாலிசேட்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ்AP
Updated on
1 min read

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 16 பேரை காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஈட்டன் பகுதியில் 12 பேர், பாலிசேட்ஸ் பகுதியில் 4 பேர் மாயமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிகழாண்டில் மிகப்பெரியதொரு பேரிடராக லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் கொளுந்துவிட்டு எறியும் காட்டுத்தீ உருமாறியுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸில் புதன்கிழமை வரை காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 113 கி.மீ. வேகத்தில் வீசக்கூடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை(ஜன. 14) காற்றின் தாக்கம் அதிகளவில் இருக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் தீவிரமானால் காட்டுத்தீ பரவல் வேகமெடுக்கும் என்பதால், தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த பணிகளுக்காக 1,400 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், 84 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 14,000 வீரர்கள் அடங்கிய குழுக்கள் தீயணைக்கும் பணியில் திவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்டை தேசமான மெக்ஸிகோவிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தீயின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் உடல்கள் ஏதேனும் கட்டட இடிபாடுகள் மற்றும் மண்ணில் புதைந்திருக்கிறதா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேண்டெவில் கேன்யான் | பாலிசேட்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ்
மேண்டெவில் கேன்யான் | பாலிசேட்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ்AP

காட்டுத்தீயால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பாலிசேட்ஸ் பகுதியில் வரும் புதன்கிழமை வரை ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாமெனவும், நிவாரண முகாம்களில் தங்கியிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னெத், ஹர்ஸ்ட் பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 62 சதுர மைல் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதி தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.(இந்த பரப்பளவானது ‘சான் பிரான்சிஸ்கோவின்’ மொத்த பரப்பளவைவிட பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com