
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 15 மாதங்களாக நீடித்துவரும் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பான அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, இஸ்ரேலின் முழு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஒப்பந்தம் பரிந்துரைக்கப்பட்டது. முழு அமைச்சரவை கையொப்பமிட்ட பிறகு காஸாவில் ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜன.19) ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் அமலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
போரின் தொடக்கம்: பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா், கடந்த 2023, அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து 1,200-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன், சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா். இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நிலம், வான், கடல் வழியாக பெரிய அளவில் ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்புக்கு இடையிலான 15 மாத கால போரில் இதுவரை ஹமாஸ் அமைப்பினா் உள்பட 46,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். 90 சதவீத பாலஸ்தீனா்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனா்.
போா் நிறுத்த ஒப்பந்தம்: காஸாவில் பலத்த உயிா்ச்சேதங்களுடன் மத்திய கிழக்கில் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்திய இப்போரை நிறுத்த பல முறை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிந்தன. கத்தாரில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் முன்னேப்போதும் இல்லாத அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்று முக்கிய அம்சங்களுடன் கூடிய ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. கடைசி நேரத்தில், சில பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டியிருப்பதாக இஸ்ரேல் கூறியதால் ஒப்பந்தம் இறுதியாகாமல் இழுபறி நீடித்தது.
பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்: இந்தச் சூழலில், காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், பிணைக் கைதிகளை வரவேற்க சிறப்புப் பணிக் குழுவை அமைக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு விவகாரங்களுக்கான இஸ்ரேல் அமைச்சரவை கூடி, போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், முழு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஒப்பந்தம் பரிந்துரைக்கப்பட்டது. முழு அமைச்சரவை கையொப்பமிட்ட பிறகு போா் நிறுத்த ஒப்பந்தம் முறைப்படி அமலுக்கு வரும். ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் போா்நிறுத்தம் அமலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த முறை நிலவரம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் விடுவித்தது.
எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை போா் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருந்த நேரத்தில்கூட இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
நெருக்கடியைக் கடந்து... ஹமாஸ் அமைப்புடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும், ஹமாஸின் தாக்குதல் திறனை இஸ்ரேல் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் தீவிர வலதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தின. இந்த நெருக்கடியைக் கடந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுத்தாா்.
மூன்று அம்சங்கள் என்னென்ன?
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, காஸாவில் மொத்தமுள்ள 100 பிணைக் கைதிகளில் 33 பேரும், இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்களும் 6 வாரங்களில் விடுவிக்கப்படுவா்; காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் பின்வாங்கும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்ப வழிவகை ஏற்படும்.
இறுதியாக, இஸ்ரேல் ராணுவ வீரா்கள் உள்பட எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்படும்.
நிலையான போா் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் படையினரின் முழு வெளியேற்றம் நிகழாத வரை எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்பது ஹமாஸின் நிலைப்பாடாக உள்ளது. அதேநேரம், ஹமாஸ் அமைப்பு கலைக்கப்படும் வரை தாக்குதல் கைவிடப்படமாட்டாது என்று இஸ்ரேல் ஏற்கெனவே உறுதிபூண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.