
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவிருப்பதைத் தொடர்ந்து அவரின் 15 அடி உயர வெண்கல சிலையை ஓஹியோவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் வடிவமைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நடைபெற்றது. இதில், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸைத் தோற்கடித்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் பதவியேற்பு விழா (ஜன. 20) நாளை அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்தப் பதவியேற்பு விழாவுக்கு உலகம் முழுவதுமிருந்து பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓஹியோவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் ஆலர் காட்ரில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 15 அடி உயர வெண்கல சிலையை வடிமமைத்துள்ளார். ‘டான் கொலாசஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை வடிவமைக்க 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6.5 கோடி) செலவாகியுள்ளது.
கடந்தாண்டு ஜூலை 13 அன்று பேரணியில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது அவரது காதுகளில் துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்றது. அப்போது தனது கைகளை உயர்த்தி அவர் முழக்கமிட்ட புகைப்படம் உலகம் முழுக்க வைரலானது. அதனை, நினைவுகூறும் விதமாக இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார் ஆலர் காட்ரில்.
6 டன் எடையுள்ள இந்தச் சிலையை டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அர்ப்பணிக்கும் நோக்கத்தில் உருவாக்கியதாக ஆலர் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்தச் சிலை விரைவில் நாடு முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு டிரம்ப்பின் அதிபர் நூலகத்தில் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சிலையை செய்வதற்கு கிர்ப்டோகரன்சி முதலீட்டாளர்கள் குழுவினர் நிதியுதவி அளித்துள்ளனர். கிரிப்டோகரன்சி குழுமத்திற்கு டிரம்ப்பின் ஆதரவு எப்போதும் இருப்பதாக நம்புகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
’மேக் அமெரிக்க கிரேட் அகெய்ன்’ வெற்றிப் பேரணி இன்று நடைபெறும் நிலையில் ’டான் கொலாசஸ்’ சிலை வாஷிங்டனில் உள்ள கேப்பிடல் அரேனா ஒன் அரங்கில் நேற்று (ஜன. 18) திறக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.