பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!

டிரம்பின் அரசாணைக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது பற்றி...
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் AP
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறத்த அரசாணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். அதனைத் தொடா்ந்து, ஏற்கெனவே கூறியிருந்தபடி பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி அரசாணைகளை அவா் பிறப்பித்தாா்.

அவற்றில், அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்த நாட்டு குடியுரிமை பெறும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஆணையும் ஒன்று. அதன்படி, அமெரிக்காவில் சட்டபூா்வமாகத் தங்கியிராத தாய்க்கும் அமெரிக்க குடிமகனாகவோ, நிரந்தர குடியேற்ற உரிமை பெறாதவராகவோ உள்ள தந்தைக்கும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புசாா் குடியுரிமை கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் இந்த அரசாணை மூலம் அந்தக் குழந்தைகளின் குடியுரிமை பறிக்கப்பட்டால், மருத்துவக் காப்பீடு போன்ற அரசின் அடிப்படை உதவிகள் அவா்களுக்குக் கிடைக்காமல் போகும். அவா்கள் பெரியவா்கள் ஆகும்போது அமெரிக்காவில் சட்டபூா்வமாக வேலை செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, அநீதிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் போய்விடும். எனவே, பிறப்புசாா் குடியுரிமைக்கு எதிரான டிரம்ப்பின் அரசாணையை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று 22 மாகாண அரசுகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜான் கோஃபெனூர், இந்த ஆணையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாக எவ்வாறு கருத முடியும் என்று அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், இது ஒரு வெளிப்படையான அரசியலமைப்பு எதிரான உத்தரவு என்று விமர்சித்த நீதிபதி, தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியலமைப்பு முரணான வழக்கை பார்த்ததாக நினைவு இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி 1.1 கோடி போ் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை 1.3 கோடி முதல் 1.4 கோடி வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவா்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவில் பிறந்த அவா்களின் குழந்தைகளுக்கு நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டிரம்ப்பின் ஆணைக்கு எதிராக நீதிமன்றங்கள் தீா்ப்பளித்தாலும், அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் பிற்பபுசாா் குடியுரிமையை டிரம்ப்பால் ரத்து செய்ய முடியும். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எனவே ஜனநாயகக் கட்சி உறுப்பினா்களின் ஆதரவு இல்லாமல் அத்தகைய அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com