
காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக நான்கு பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனைகளை செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச ஆணையத்திடம் ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது. இது உள்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அதில், காஸா நகரின் முக்கிய சதுக்கப் பகுதிக்கு நான்கு பெண்களும் அழைத்துவரப்பட்டனர். அங்கு, ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவிந்து இருந்தனர். பெண்களைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய ஹமாஸ் படையினர் நின்றிருந்தனர். ஏஎஃப்பி செய்தியாளர்கள் நால்வர், பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்யவதை நேரில் பார்த்தனர்.
பிணைக் கைதிகள் உடனடியாக அழைத்துச் செல்ல, செஞ்சிலுவை சங்கத்தின் வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. இஸ்ரேல் பிணைக் கைதிகள் நான்கு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்து பாலஸ்தீனிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க.. முதல் ஒரு வாரத்தில் டொனால்ட் டிரம்ப் சொன்ன பொய்கள்!
காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், விடுவிக்கப்பட்ட நான்கு பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த நிலையில், இன்று அவர்களை விடுவித்துள்ளது.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு 1,139 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், அங்கிருந்து சுமாா் 250 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
அதிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 47,283 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.
அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி, 3 பெண் பிணைக் கைதிகளைகளை ஹமாஸ் அமைப்பினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். இஸ்ரேல் அரசும் தங்கள் சிறைகளில் இருந்து பாலஸ்தீனத்தைச் சோ்ந்த 69 பெண்களையும் 21 சிறாா்களையும் விடுவித்தது.
அதன் தொடா்ச்சியாக, மேலும் நான்கு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் சனிக்கிழமை விடுவித்துள்ளனர். அவர்கள், இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா என்று தெரிய வந்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.