உலகின் முதல் நாடாக தலிபான் அரசை அங்கீகரிக்கும் ரஷியா!

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதைப் பற்றி...
ரஷிய தூதர் டிமிட்ரி ஸிர்னோவ் மற்றும் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி...
ரஷிய தூதர் டிமிட்ரி ஸிர்னோவ் மற்றும் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி...AFP
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்யும் தலிபான்களின் அரசை, ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த அரசுக்கு எதிராக, நடைபெற்ற உள்நாட்டுப் போரின் மூலம், கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். அதையடுத்து, இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பு அந்நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போர்களினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, சர்வதேச அங்கீகாரத்தைத் தற்போது எதிர்பார்த்து, மற்ற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், உலகின் முதல் நாடாக, ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசை ரஷியா அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு தலைநகர் காபூலில், நேற்று (ஜூலை 3) நடைபெற்ற தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி மற்றும் ரஷிய தூதர் டிமிட்ரி ஸிர்னோவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ”ரஷியா மற்றவர்களைவிட முன்னதாக உள்ளது. அவர்களது இந்த தைரியமான முடிவு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன” என வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி கூறியுள்ளார்.

இதுகுறித்து, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், இஸ்லாமிய அமீரக அரசை அங்கீகரிப்பது, இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் மேம்படும் என்றும், வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அதிக வளர்ச்சி ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் போராட்டத்தில் தொடர்ந்து ரஷியா அவர்களுக்கு உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தலிபான் அமைப்பை நீக்கிய ரஷியா, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தலிபான்களை தங்களது நேசப் படை என வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

It is reported that Russia has officially recognized the Taliban government ruling Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com