
இஸ்ரேலுடனான போரில் ஈரான் நாட்டில், சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் தொடங்கிய நிலையில், இருநாடுகளும் ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.
இந்தப் போரானது, கடந்த ஜூன் 24 ஆம் தேதி 12 ஆம் நாளை எட்டியதுடன், போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதை, இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன.
தற்போது போர் நிறுத்தம் அமலிலுள்ளதால், போரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஈரான் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தப் போரில் ஈரானில் சுமார் 435 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 1,090 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,475 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் வாஷிங்டனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.