
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பேருந்தில் சென்ற பஞ்சாப் மாகாணப் பயணிகளை, அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று சுட்டுக்கொன்றுள்ளனர்.
வடக்கு பலூசிஸ்தானிலுள்ள ஸோப் பகுதியில் அருகில், நேற்று (ஜூலை 10) இரவு சென்ற பேருந்தை ஆயுதம் ஏந்திய நபர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர், அதிலிருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி அவர்களது அடையாள அட்டைகளை வாங்கி சோதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தில் பயணித்த பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பயணிகளை மட்டும் கடத்திச் சென்று அந்த மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றதாகவும், தற்போது கொல்லப்பட்ட பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க அப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்தப் படுகொலைக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 9 பயணிகளும், லாஹூரிலிருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவுக்கு பயணம் செய்த பாகிஸ்தான் ராணுவத்தின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பலூசிஸ்தான் பயங்கரவாதிகள், அம்மாகாணத்தின் வழியாகப் பயணிக்கும் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த மக்களைக் கடத்தி கொலை செய்வது தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.