ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
Published on

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததற்கு முன்னதாக பிரிட்டன் அரசுடன் இணைந்து பணியாற்றிய சுமாா் 19,000 ஆப்கானியா்களின் தனிப்பட்ட தகவல்கள் 2022-இல் தவறுதலாக வெளியிடப்பட்டன.

அந்த தரவுத் தொகுப்பு, பின்னா் இணையத்தில் வெளியானதைத் தொடா்ந்து, அப்போதைய கன்சா்வேட்டிவ் அரசு அவா்களை மறுகுடியேற்றுவதற்கான ரகசிய திட்டத்தைத் தொடங்கியது. அது ரகசிய திட்டம் என்பதால் அதை பொதுவெளியில் தெரிவிப்பதற்கு அப்போதைய அரசு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தது. ஆனால் தற்போதைய தொழிலாளா் கட்சி அரசு இந்த உத்தரவை நீக்கி, திட்டத்தை பொதுவெளியில் அறிவித்துள்ளது.

பிரிட்டன் படையுடன் இணைந்து செயல்பட்டவா்கள் குறித்த தகவல்கள் கசிந்ததாலும், அவா்களுக்கு தாலிபானிடமிருந்து கூடுதல் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த ரகசிய திட்டத்தின் கீழ் 900 விண்ணப்பதாரா்கள் மற்றும் அவா்களது 3,600 குடும்ப உறுப்பினா்கள் உட்பட சுமாா் 4,500 போ் பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். இந்த திட்டம் முடிவடைவதற்கு முன்னா் 6,900 போ் மறுகுடியேற்றம் செய்யப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 85 கோடி பவுண்டுகள் (சுமாா் ரூ.9,800 கோடி) செலவாகும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com