
அமெரிக்காவில், கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் இருந்தபோது பதிவான விடியோ வைரலான நிலையில், ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் என்னவிதமான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது வெளியாகியிருக்கிறது.
ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மனிதவள அதிகாரிக்கு இடையேயான தவறான நட்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், நிறுவனத்தின் பெயரும் பிரபலமடைந்துவிட்டது.
ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் என்ன செய்கிறது?
நியூ யார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம்தான் ஆஸ்ட்ரோனமர். இது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தரவை நிகழ்நேரத்தில் மாற்ற, நிர்வகிக்க உதவும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலிகள் மூலம் அடுத்தடுத்து அப்டேட்களை தெரிவிக்கவும், செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியமான கணிப்புகளை வழங்கவும், டாஷ்போர்டுகளில் பணியாற்றும் பயனர்களுக்கு அதன் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கவும் தேவையான மென்பொருள் கட்டமைப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கிக் கொடுக்கிறது.
ஆஸ்ட்ரோனமரின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று ஆஸ்ட்ரோ என்பது, இது பெரிய அளவிலான தரவை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட அப்பாச்சி ஏர்ஃப்ளோவில் கட்டமைக்கப்பட்ட கிளவுட் அடிப்படையிலான, முழுமையாக நிர்வகிக்கப்படும் தளம் என்கிறார்கள்.
உலகில் உள்ள தகவல்தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் 700க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது ஆஸ்ட்ரோனமர் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களின் பட்டியலும் ஆச்சரியம் தருவதாகவே உள்ளது. ஆப்பிள், ஊபர், லிங்க்ட்இன், ஃபோர்டு, ஸ்ட்ரைப் இதில் அடங்கும்.
இந்த நிறுவனம் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக இருந்தபோதும், மிக மோசமான ஒரு காரணத்தால் இன்று உலகம் அறியப்பட்டுள்ளது.
ஆன்டி பைரன் என்ற பெயர் அண்மை நாள்களில் இணையத்தில் பிரபலமாகியிருக்கிறது. ஆஸ்ட்ரோனமரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது புகழின் உச்சியில் இருந்து, பெரும்பாலானோர் அறியப்படாத ஆன்டி பைரன் என்ற பெயர் எப்போது உலகம் முழுவதும் பேசப்பட்டதோ, அன்று அவர் தன்னுடைய தலைமை நிர்வாக அதிகாரி பதவியை இழந்துவிட்டார். கிஸ் கேமரா எனப்படும் கேமராவில் இவர்கள் சிக்கியபோது, பெரிய திரையில் இருவரும் ஒன்றாகத் தெரிவதைப் பார்த்து அச்சமடைந்த இவர்களது முகங்களை சமூக வலைத்தளங்களில் பார்க்காதவர்களே இருந்திருக்க வாய்ப்பில்லை. இது இவர்களது தொழில் வாழ்க்கையை மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையையும் சின்னபின்னமாக்கியிருக்கிறது.
இந்த நிலையில்தான், ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் பணி என்ன என்பது குறித்து இன்ஸ்டாகிராம் விடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஊபர் செயலியில் வாகனத்தை பதிவு செய்வதற்கான வழிமுறையுடன், இந்த நிறுவனத்தின் பணியை தொடர்புப்படுத்தி விடியோ வெளியாகியிருக்கிறது.
அதாவது, ஒருவர் ஒரு பயணத்தை முன்பதிவு செய்யும்போது, இருப்பிடம் ஒரு அமைப்பிலும், ஓட்டுநரின் விவரங்கள் மற்றொரு அமைப்பிலும், கட்டணத் தகவல் மூன்றாவது தளத்திலும் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், மூன்று வெவ்வேறு அமைப்புகள் இணைக்கப்பட்டு பயணம் சில நொடிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது. அது எப்படி?
இது தானாக வெறும் இணையம் இருந்துவிட்டால் நடந்துவிடுமா? நடக்காது, இந்த மூன்று அமைப்புகளையும் ஒன்றிணைக்க அப்பாச்சி ஏர்ஃப்ளோ என்ற டூல் உள்ளது. இது வெவ்வேறு அமைப்புகளில் தரவை ஒரு குறிப்பிட்ட வரிசையில் நிர்வகித்து நெறிப்படுத்துகிறது.
ஆனால் வெறும் ஏர்ஃப்ளோ மட்டும் போதாது, சில வேளைகளில் அப்டேட்கள் தானாக செயல்படாமல் போகும்போது அங்குதான் ஆஸ்ட்ரோனமர் தேவைப்படுகிறது. இது, ஏர்ஃப்ளோவை இயக்கும் ஒரு தளமாக இருக்கும். அதாவது ஏர்ப்ளோ மீது ஆஸ்ட்ரோ என்ற மென்பொருளை உருவாக்கி, அதுதான், தானியங்கி அப்டேட்களுடன் அனைத்தையும் இயக்குகிறது என்கிறார்கள்.
இந்த ஆஸ்ட்ரோனர் நிறுவனம்தான், ஏர்ஃப்ளோவை மேம்படுத்துகிறது, அதன் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டை நிர்வகிக்கிறது என்கிறது அந்த விடியோ
மீண்டும் ஆண்டி பைரன் பற்றி வருவோம். ஆண்டி பைரனின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, தலைமை நிர்வாக அதிகாரி பதவியை பீட் டிஜாய் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். தற்போது நிறுவனம் சந்தித்திருக்கும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பதிலளித்த டிஜாய், இது எங்கள் நிறுவனத்துக்கு ஒரு விசித்திர அனுபவத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் ஆஸ்ட்ரோனர் கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல சவால்களை எதிர்கொண்டது, ஆனால், ஒரு பிரச்னையின்போது, மிகச் சிறந்த ஒரு தீர்வைக் கண்டுபிடித்து அது அனைத்தையும் தகர்த்தெறியும் என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.