
கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று யேமன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை கொல்லப்பட்ட மஹதியின் சகோதரர் மறுத்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ரத்தப் பணம் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவலையும் அப்துல் ஃபத்தா விமர்சித்துள்ளார். "பேச்சுவார்த்தை எனும் சந்தையில் தலாலின் இரத்தம் ஒருபோதும் பொருளாக இருக்காது என்று அவர் காட்டமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை யேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் வெளியிட்டது.
இந்த தகவல் வெளியான சற்று நேரத்தில், 2017ஆம் ஆண்டு யேமனைச் சேர்ந்த தொழிலதிபர், கொலை செய்யப்பட்ட தலால் அப்டோ மஹதியின் சகோதரர் அப்துல் பட்டாஹ் மஹதி, நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பொது வெளியில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இவர் இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் யேமன் நாட்டின் அட்டார்னி ஜெனரலுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். எங்கள் சகோதரர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகிறோம். அதில் எந்த தாமதமும் இல்லாமல் விரைவாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதே வேளையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் வெளியிட்ட அறக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிக்கையை மத்திய வெளியுறவு விவகாரத் துறை மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. யேமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இருந்தாலும், யேமன் அரசிடமிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுதொடர்பாக அறிவிக்காத நிலையில், கொலை செய்யப்பட்ட மஹதியின் சகோதரர், அதுபோன்ற எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றும், விரைவாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
யார் இந்த நிமிஷா பிரியா?
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு, தொழில் கூட்டாளியான யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதியைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றார்.
ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் அவரது மரண தண்டனையை நிறைவேற்ற நாள் முடிவு செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினரும், பல்வேறு அமைப்புகளும் எடுத்த முன்னெடுப்புகள் காரணமாக கடைசிநேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை கொலை செய்யப்பட்ட மஹதியின் சகோதரர் மறுத்துள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய, கொலையுண்ட நபரின் குடும்பத்தினர், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் கொடுக்கும் ரத்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டால் மட்டுமே முடியும். ஆனால், இப்போது வரை அவர்கள் அதனை ஏற்க மறுத்து வருவதாகத் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.