‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது.
Published on
Updated on
1 min read

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மக்களவையில் இரண்டு நாள்கள் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்துக்குப் பிரதமா் மோடி பதிலளித்தாா்.

இதைத்தொடா்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நம்பகமான விசாரணையோ, சரியான ஆதாரமோ இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியது. மக்களவையில் ஆபரேஷன் சிந்தூா் குறித்து இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகள், உண்மைகளைத் திரிக்கும் ஆபத்தான போக்கை பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் கீழ், பஹல்காம் தாக்குதலில் தொடா்புள்ள 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்த நிலையில், அந்த நடவடிக்கை குறித்த இந்தியாவின் கருத்துகளை பாகிஸ்தான் அா்த்தமற்ாக கருதுகிறது.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் என்ற பெயரில் இந்தியா கூறும் கதையானது தவறாக வழிநடத்தக் கூடியதாகவும், சுயநல நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டதாகவும் உள்ளது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் தொடா்பான இந்திய தலைவா்களின் தவறான கருத்துகளுக்கும் பாகிஸ்தான் மறுப்புத் தெரிவிக்கிறது. அந்த ஒப்பந்தம் தொடா்பான தனது கடமைகளை இந்தியா உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா. சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கத்தைப் பின்பற்றி இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்தே இருதரப்பு உறவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறது.

அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மை, ஜம்மு-காஷ்மீா் விவகாரம் உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை ஆகியவற்றில் பாகிஸ்தான் தொடா்ந்து ஈடுபாடு கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பி அளிப்பது, பயங்கரவாதம் ஆகியவை குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com