5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்.. வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்த பேரதிர்ச்சி!

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட் என பல சென்சார் கட்டுப்பாடுகள் இருப்பது வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்துள்ளது.
file photo from eps
செல்போன் - கோப்புப்படம்EPS
Published on
Updated on
2 min read

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

மக்களை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசுகளில், உலக நாடுகளிலிருந்து, முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது வடகொரிய அரசு. அது எப்படி என்பது, அந்நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு செல்போன் மூலம் உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அரசின் கீழ், அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது உலகம் அறிந்ததுதான். தென் கொரிய தொலைக்காட்சி சீரியல்களுக்குத் தடை என ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இதனிடையே, கடந்த ஆண்டு வட கொரியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போன் மூலம், அந்நாட்டின் கொடுங்கோல் தலைவர் போல கிம் ஜாங் உன் செயல்படுவதும், மக்களை சென்சார் தொழில்நுட்பங்களை வைத்து கடுமையாக கண்காணித்து வருவதும், தென்கொரிய கலாச்சாரம் எதுவும் வடகொரியாவுக்குள் நுழையாத வகையில், கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

வடகொரிய மக்கள் தங்களது செல்போனில் பயன்படுத்தும் மொழியைக் கூடக் கட்டுப்படுத்தும் அளவுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதும் காவல்துறைக்கு நேரடியாக தொழில்நுட்பத்தின் தகவல்கள் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வடகொரியாவில் பயன்படுத்தப்படும் செல்போன்களில் இன்டர்நெட் பயன்படுத்தவும் தென்கொரிய சீரியல்களைப் பார்க்கவும், கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் முடியாத வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தென்கொரியாவில் பொதுவாக பெண்கள் தங்களது ஆண் நண்பர்களை அல்லது அண்ணன்களைக் குறிக்கும் வார்த்தையான ஒப்பா (oppa) என்று வடகொரியாவில் உள்ள யாராவது தங்களது செல்போனில் டைப் செய்தாலே போதும், அது ஆட்டோ கரெக்ட் ஆகி காம்ராட் என மாறிவிடும். அது மட்டுமல்ல, இந்த வார்த்தையை உங்களது சகோதர்களைப் பற்றி சொல்ல மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கைத் தகவலும் வந்துவிடுமாம்.

அது மட்டுமா? தென் கொரியா என்று போனில் டைப் செய்தால் போதும், அது தானாகவே பொம்மை அரசு என்று மாறிவிடும்.

சரி போகட்டும்.. என்று பார்த்தால், கடத்தி வரப்பட்ட செல்போன், 5 நிமிடங்களுக்கு ஒரு முறை தானாகவே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அது அதன் பயனருக்குத் தெரியாது. இந்த ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்களும், பயனருக்குத் தெரியாமல், அதிகாரப்பூர்வ நபர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஓரிடத்தில் சேமிக்கப்படுகிறது. இது செல்போனைப் பயன்படுத்துபவரின் நடத்தையை மிகத் துல்லியமாகக் கண்டறியும் ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவேளை இந்த ஸ்க்ரீன் ஷாட்களைக் கொண்டு ஒருவர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக நாடுகளில், தொழில்நுட்பத்தால் மனிதன் சிக்கி, சீரழிந்துகொண்டிருக்கும் நிலையில், அதே தொழில்நுட்பத்தின் மூலம் மக்களைத் துல்லியமாகக் கண்காணித்து வரும் வடகொரிய அரசின் நடவடிக்கைகள் உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

2011ஆம் ஆண்டு வடகொரிய ஆட்சியைக் கைப்பற்றிய கிம் ஜாங் உன், சின்ன சின்ன குற்றங்களுக்குக்கூட கடுமையான தண்டனைகள் கொடுத்து, தனது நாட்டை இரும்புக்கரம் கொண்டு ஆண்டுவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com