உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

காஸாவில் பெண்கள், சிறுமிகளின் சுகாதாரம் பற்றி...
Women Suffer a Silent Menstrual Emergency in Gaza
காஸாவில்...UNFPA
Published on
Updated on
2 min read

காஸா போரினால் ஒருபுறம் மக்கள் உணவின்றித் தவித்துவரும் நிலையில், மறுபுறம் பெண்கள், சிறுமிகள் சுகாதாரமின்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இடையில் ஒரு சில வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் போர் தீவிரமடைந்து வருகிறது.

காஸாவில் ஒருபுறம் போர் நடந்துவந்தாலும் மறுபுறம் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கி வந்தன.

jehad alshrafi

ஆனால் அதற்கும் இஸ்ரேல் தடை விதித்தது. உணவுப் பொருள்களை காஸாவிற்குள் செல்ல அனுமதி மறுத்தது. பின்னர் ஐ. நா. உள்ளிட்ட அமைப்புகளின் வலியுறுத்தலின்பேரில் குறிப்பிட்ட அளவு உணவு, மருந்துகளை அனுமதிக்கிறது. எனினும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அந்த உணவும் மருந்தும் போதுமானதாக இல்லை.

காஸாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர். இந்நிலையில், உணவைத் தேடி உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, காஸாவில் உள்ள பெண்கள், சிறுமிகள் மாதவிடாய் காலங்களில் போதிய சானிட்டரி நாப்கின், சோப்பு உள்ளிட்டவை கிடைக்காமல் சுகாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

'எனக்கு உணவைவிட நாப்கினும் சோப்பும்தான் இப்போது தேவையாக இருக்கிறது' என மாதவிடாய் நாளில் காஸா இளம்பெண் ஒருவர் கூறுகிறார்.

கடந்த மார்ச் மாதம் முதல் காஸாவுக்குள் சுகாதாரத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. இதில் பெண்களுக்கான நாப்கின்களும் அடங்கும். அங்கு தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பெண்கள், முதல்முறையாக பூப்படையும் சிறுமிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மாதவிடாய் நாள்களில் தண்ணீர் இன்றி, சோப்பு உள்ளிட்ட பொருள்கள் இன்றி, நாப்கின் இன்றி இருக்கும் பெண்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாவதாக ஐ.நா. நிவாரண நிறுவனம் கூறியுள்ளது.

"நாங்கள் முகாம்களில் மக்கள் கூட்டத்தில் வசிக்கிறோம். என்னுடைய மாதவிடாயின்போது என்னிடம் ஒரே ஒரு நாப்கின்தான் இருந்தது. அதனை பயன்படுத்திவிட்டேன். அதனை தண்ணீர் விட்டு அலசிகூட மீண்டும் பயன்படுத்த முடியவில்லை. அதனால் மாதவிடாய் முடியும்வரை ஓரிடத்தில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தேன்" என்று கூறுகிறார்.

பல பெண்கள் கிழிந்த துணிகளையோ, நாப்கின்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தோ பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் அந்தத் துணிகளை சுத்தம் செய்வதற்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை இருக்கிறது.

jehad alshrafi

காஸாவில் தற்போது 7 லட்சம் பெண்கள், இளம்பெண்கள் உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் தங்கள் முதல் மாதவிடாயை எதிர்கொள்கின்றனர். காஸாவில் ஒரு மாதத்திற்கு சுமார் 10 மில்லியன்(1 கோடி) நாப்கின்கள் தேவைப்படுகிறது.

தன்னிடம் இருந்த ஒரே ஒரு சட்டையைக் கிழித்து 4 மகள்களுக்கு கொடுத்ததாக ஜாபாலியா பகுதியில் வசிக்கும் தந்தை ஒருவர் கூறுகிறார்.

"காஸாவில் உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் மாதவிடாயுடன் போராடுவதை நான் கண்கூடாகப் பார்த்து வருகிறேன். கர்ப்பிணிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்களது கண்களில் நான் தைரியத்தையும் அதேநேரத்தில் வலியையும் பார்க்கிறேன். இதுபோன்ற போர் காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் சிறுமிகளும்தான். சானிட்டரி நாப்கின்கள் இல்லையென்றால் மாதவிடாய் நாள்கள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்" என அங்குள்ள பெண் மருத்துவர் கூறுகிறார்.

இதனால் அங்குள்ள பெண்கள், சிறுமிகளுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு கர்ப்பம் தரித்தலில் பிரச்னை ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார். சிறுமிகள் பலரும் தொற்றுகளுக்கும் ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் பயம், கூச்சம் காரணமாக அங்குள்ள பெண்கள், சிறுமிகள் மாதவிடாய் பற்றி வெளியில் சொல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.

மேலும் அங்கு இயங்கும் ஒரு சில மருத்துவமனைகளில்கூட பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை. இதனால் கர்ப்பிணிகள் சாலைகளில் டென்ட் குடிசைகளில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அவல நிலைதான் தொடர்கிறது.

பெண்கள், பெண் குழந்தைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அவர்களது சுகாதாரம் பேணப்பட வேண்டும் என்று ஐ.நா. அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com