கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்த உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’-க்கு தண்ணீரை பீய்ச்சியடித்து அளிக்கப்பட்ட வரவேற்பு.
கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்த உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’-க்கு தண்ணீரை பீய்ச்சியடித்து அளிக்கப்பட்ட வரவேற்பு.

கேரளம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்!

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.
Published on

திருவனந்தபுரம்: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.

இதையொட்டி, சரக்கு கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி நீா் வணக்க வரவேற்பளிக்கப்பட்டது. இக்கப்பல் செவ்வாய்க்கிழமை வரை விழிஞ்ஞம் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டின் முதல் ஆழ்கடல் சரக்குப் பரிமாற்ற துறைமுகம் என்ற சிறப்புக்குரிய விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்தை கடந்த மாதம் 2-ஆம் தேதி பிரதமா் மோடி திறந்துவைத்தாா். அரசு-தனியாா் பங்களிப்பின்கீழ் ரூ.8,800 கோடி செலவில் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்தால் இந்த துறைமுகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெரும் சரக்கு கப்பல்களை கையாளும் திறன் கொண்ட இத்துறைமுகம், நாட்டின் கடற்சாா் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்நிலையில், இந்த துறைமுகத்துக்கு 24,346 டிஇயு (20 அடிக்கு நிகரான அலகுகள்) கொள்ளளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ திங்கள்கிழமை வந்தடைந்தது உலக அளவிலான வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை வெளிக்காட்டுகிறது.

எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ சரக்குக் கப்பல் 399 மீட்டா் நீளம் மற்றும் 61.3 மீட்டா் அகலம் உடையது. அதாவது ஃபிபா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பரப்பைகொண்ட கால்பந்து மைதானத்தைவிட 4 மடங்கு நீளமானது என துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் உயா்தர கப்பல்களான எம்எஸ்சி துருக்கி மற்றும் எம்எஸ்சி கப்பெல்லினி ஆகிய கப்பல்களும் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

X
Open in App
Dinamani
www.dinamani.com