இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள்! போர் துவக்கம்?

இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதைப் பற்றி...
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள்...
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள்...AP,AFP
Published on
Updated on
2 min read

இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு, அந்நாட்டின் முக்கிய நகரங்களின் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் நேற்று (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் போர் விமானங்கள் மற்றும் ஈரான் நாட்டுக்குள் முன்னதாகவே கடத்தப்பட்ட ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம், நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் தூதர் கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் 72 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முன்பாகவே நடத்தப்படுவது அவசியம் என அவர்களது தாக்குதல் குறித்து இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அமெரிக்க அரசு மற்றும் முக்கிய நிபுணர்கள் ஆகியோர் ஈரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் பதிலடி

இஸ்ரேலின் இந்தக் குற்றங்களிலிருந்து அவர்கள் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி, நேற்று (ஜூன் 13) வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் பல பகுதிகளின் மீது ஈரான் நேற்று (ஜூன் 13) நள்ளிரவு முதல் இன்று (ஜூன் 14) அதிகாலை வரை ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

இதில், இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ரிஷான் லெசியன் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான விடியோக்களில், ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலின் கட்டடங்கள் இடிந்துள்ளதும், அங்குள்ள வாகனங்கள் சேதமாகியுள்ளதும் பதிவாகியுள்ளது.

அந்நாட்டு தலைநகர் டெல் அவிவில், 34 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் சரிந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களின்போது, அமெரிக்காவின் நிலம் சார்ந்த வான்வழித் தற்காப்பு அமைப்புகள், அப்பகுதிகளில் தாக்க வரும் ஈரானின் ஏவுகணைகளைத் தகர்க்க இஸ்ரேலுக்கு உதவியுள்ளன.

கொண்டாட்டத்தில் மக்கள்!

இஸ்ரேலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களை, ஈரான் நாட்டு மக்கள் இனிப்புகள் வழங்கி ஆராவாரத்துடன் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஈரான் ராணுவம் அதன் எக்ஸ் தளப் பதிவில், தாக்குதல்களுக்கு இடையில் அந்நாட்டு மக்கள் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபடும் விடியோக்களையும் பகிர்ந்துள்ளது.

மற்றொரு விடியோவில், இஸ்ரேலை தாக்குவதற்காக ஈரான் ஏவிய ஏவுகணைகள் இராக் வான்வழியாகக் கடக்கும்போது, அந்நாட்டு மக்கள் ஆராவாரத்துடன் கூச்சலிடுவதும் பதிவாகியுள்ளது.

அணுசக்தி பேச்சுவார்த்தை கைவிடப்படுகிறதா?

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முடக்கக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்காக, இருநாட்டு அதிகாரிகளும் ஓமனில் வரும் ஜூன் 15 ஆம் தேதியன்று சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பின்னர் அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் எந்தவொரு அர்த்தமுமில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் கைவிடப்படுகிறதா என்று இதுவரை தெளிவாகவில்லை.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதிகளா? இஸ்ரேலின் தவறால் என்ன நடந்தது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com