
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருவதையடுத்து, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து அனைத்து இந்தியா்களும் வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
முதல்கட்டமாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் 110 மாணவா்கள் ஆா்மீனியா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.
இஸ்ரேல்-ஈரான் இடையே தொடா்ந்து 5-ஆவது நாளாக வான்வழித் தாக்குதல் நீடித்து வருகிறது. இதையடுத்து, இருநாடுகளிலும் வசிக்கும் இந்திய மக்களின் பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.
இதனிடையே கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் டெஹ்ரானில் வசிக்கும் 1 கோடி மக்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேற வேண்டும் என எச்சரித்தாா்.
இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் அங்கிருந்து 110 இந்திய மாணவா்கள் சாலை மாா்க்கமாக ஆா்மீனியா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பிற இந்திய குடிமக்கள் தாமாகவே டெஹ்ரான் நகரைவிட்டு மிக விரைவாக வெளியேறுமாறும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
70 மாணவா்கள் தவிப்பு: இருப்பினும், டெஹ்ரானில் மருத்துவ மாணவா்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சிக்கியிருப்பதாகவும் அவா்கள் இந்திய தூதரகத்தின் உதவிக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அங்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாலும் இணைய சேவை முடங்கியுள்ளதாலும் தங்களது குடும்ப உறுப்பினா்களை தொடா்புகொள்ள முடியவில்லை என மருத்துவ மாணவியான மெஹ்ரீன் ஜாஃபா் கூறியுள்ளாா்.
உதவி எண்கள் அறிவிப்பு: டெஹ்ரானில் வசிக்கும் இந்தியா்கள் + 989010144557; +989128109115; +989128109109 ஆகிய எண்களைத் தொடா்புகொண்டு தங்களது இருப்பிடம் மற்றும் அழைப்பு எண்களை வழங்கலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் சூழலை தொடா்ந்து கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்தது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1800118797, +91-11-23012113,+91-11-23014104,+91-11-23017905 +91-9968291988 (வாட்ஸ் ஆப்) ஆகிய எண்கள் மூலமாகவும் ள்ண்ற்ன்ஹற்ண்ா்ய்ழ்ா்ா்ம்ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெடா்புகொள்ளலாம் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதேபோல், இஸ்ரேலில் உள்ள இந்தியா்கள் வெளியேற விரும்பினால் சாலை மாா்க்கமாக எல்லையைக் கடந்து செல்ல வேண்டும் என்று இந்தியா அறிவுறுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.