
காஸாவில் உணவுக்காக கூடும் மக்களிடமும் இரக்கம் காட்ட மறுக்கும் இஸ்ரேல் நடவடிக்கைகள், உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாத நிலையில், தீவிர தாக்குதலை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், காஸாவுக்குள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்வதற்குத் தடை விதித்தது.
இருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக, குறைந்தபட்ச அளவிலான நிவாரணப் பொருள்களுக்கு அனுமதி அளிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், உணவுக்காக கூடும் காஸா மக்களை நோக்கி இஸ்ரேல் நடத்தும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், தங்களின் குடும்பத்தினருக்காக தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து, அப்பகுதி மக்கள் கூடுகின்றனர்.
வழங்கப்படும் நிவாரணப் பொருள்களான அரிசி, பருப்பு, மாவு உள்ளிட்ட பொருள்களுக்காக, வேறு வழியின்றி மரண விளையாட்டில் காஸா மக்கள் ஈடுபடுவதாக உலக நாடுகள் வருத்தம் தெரிவிக்கின்றன.
உணவுப் பொருள்களுக்காக ஓடுபவர்களிலும் எல்லோருக்கும் நிவாரணப் பொருள்கள் கிடைப்பதில்லை என்பதுதான் பெரும் வருத்தம்.
அவ்வாறு ஓடுபவர்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களை சாய்க்கிறது. அதுமட்டுமின்றி, இஸ்ரேல் ராணுவத்தால் சுடப்பட்டு, ரத்தம் கொட்ட உயிருக்கு போராடுபவரைக் காப்பாற்றக்கூட வாய்ப்புகளின்றி, உணவுக்காக ஓடும் அவல நிலையில் இருப்பதாக காஸா மக்கள் தெரிவிக்கின்றனர்.
தென்கொரிய இணையத் தொடரான ஸ்குவிட் கேமில் (Squid Game) வருவதுபோல, காஸாவில் நிலைமை இருப்பதாக உலக நாடுகள் விமர்சிக்கின்றன.
கடன் கோருபவர்களை விளையாட்டுக்கு அழைத்து, வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகையும், தோற்பவர்களைக் கொல்லும் வகையிலும் ஸ்குவிட் கேம் தொடரில் காட்டப்படுகிறது. அதுபோலவே, உணவுப் பொருள்களுக்காக ஓடுபவர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.
இதையும் படிக்க: இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.