
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசுகையில்,
"இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்ற வைக்கும். அதை நாம் பரவ விடக் கூடாது. அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள். போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளின் தலைவிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்தின் தலைவிதியை மாற்ற உதவும். போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மோதல் கணிக்க முடியாததாக உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் ஒற்றுமை மற்றும் ஐ.நா. சாசனத்தை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல், ஈரான் நாட்டின் பிரதிநிதிகள் தங்களுடைய குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் கூறிய நிலையில், குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றால் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்போம் என ஈரான் கூறியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மோதல்
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆப்பரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வாரம் அதிகாலை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் ஈரானும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலானவை இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், எஞ்சிய ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கின. தற்போது இரு நாடுகளும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.