
ஈரான் மீதான அமெரிக்காவின் வான்வெளித் தாக்குதலால், உலகப் போர் ஆரம்பமாகி விட்டதாக உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வருகிறது. இந்தப் போரில், இஸ்ரேலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மேலும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்காவும், தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் (Truth Social), ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். எங்களின் அனைத்து விமானங்களும் இப்போது ஈரான் வான்வெளியைவிட்டு வெளியேறி விட்டன.
எங்களின் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கே திரும்பி விட்டன. அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். தாக்குதலின்போது கவனம் செலுத்திய வீரர்களுக்கு நன்றி. உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்ததில்லை.
இது அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி, உலகுக்கும் ஒரு வரலாற்றுத் தருணம். ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். இது அமைதிக்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால், தற்போது ரஷியா உள்பட ஈரான் ஆதரவு நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் போரில் ஈடுபட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், உலக நாடுகளிடையே போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதல் குறித்து, மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று பேசவுள்ளார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் போா்: ரஷியாவுக்கு பலனா? பாதகமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.