தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான புனித எலியாஸ் தேவாலயம்.
தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான புனித எலியாஸ் தேவாலயம்.

சிரியா தேவாலயத்தில் ஐஎஸ் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

சிரியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இஸ்லாமிய தேச அமைப்பை (ஐஎஸ்) சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.
Published on

வேயிலா (சிரியா): சிரியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இஸ்லாமிய தேச அமைப்பை (ஐஎஸ்) சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசுக்குச் சொந்தமான சனா செய்தி நிறுவனம் கூறியதாவது:

தலைநகா் டமாஸ்கஸின் புறநகா்ப் பகுதியான வேயிலாவில் புனித எலியாஸ் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. அந்த தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஐஎஸ் பயங்கரவாதி, அங்கிருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். அத்துடன், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அவா் வெடிக்கச் செய்தாா். இதில் 25 போ் உயிரிழந்தனா்; 63 போ் காயமடைந்தனா் என்று சனா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சிரியாவில் நடைபெறும் மோதல்களைக் கண்காணித்து வரும், பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறுகையில், இந்தத் தாக்குதலில் சுமாா் 19 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா் என்று தெரிவித்தது. ஆனால் துல்லியமான எண்ணிக்கைகளை அது வெளியிடவில்லை. உயிரிழந்தவா்களில் சில குழந்தைகளும் அடங்குவா் என்று உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும், இதில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புக்குத் தொடா்பிருப்பது பூா்வாங்க விசாரணையில் தெரியவந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நூருதீன் அல்-பாபா செய்தியாளா்களிடம் கூறினாா்.

வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்புக்கு தங்களது அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபா் அல்-அஸாதுக்கு ஆதரவான படையினரும் இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் நாட்டின் நிலைத்தன்மையைக் குலைக்க முயல்வதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தகவல் துறை அமைச்சா் ஹம்ஸா முஸ்தஃபா, ‘மக்களை ஒருங்கிணைக்கும் மாண்புகளுக்கு இத்தைய கோழைத்தனமான செயல்கள் எதிரானவை. இந்தத் தாக்குதல்களைக் கண்டு, சிரியாவில் அனைத்து பிரிவு மக்களுக்கும் சம உரிமை அளிக்கும் உறுதிப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம்’ என்று எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளாா்.

சிரியா உள்நாட்டுப் போரில், அப்போதைய அதிபா் அல்-அஸாத் தலைமையான படையுடனும் கிளா்ச்சிப் படைகளுடனும் மோதலில் ஈடுபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள், சிரியாவிலும் இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. பின்னா், அமெரிக்க மற்றும் ரறிய உதவியுடன் அவா்கள் விரட்டியடிக்கப்பட்டனா். இருந்தாலும், ஐஎஸ் அமைப்பு தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் அல்-அஸாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, கிளா்ச்சிப் படை தலைவா் அகமது அல்-ஷரா தலைமையில் புதிய அரசு அமைந்தது. அதற்குப் பிறகும் ஐஎஸ் அமைப்பு தனது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடா்ந்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com