‘புளோ கோஸ்ட்’: நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்
நிலவில் ‘புளோ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம், நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம் என்ற பெருமையை ‘புளோ கோஸ்ட்’ பெற்றுள்ளது.
கடந்த ஜன. 15-ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அந்நாட்டின் ஃபயா் ஃபிளை ஏரோஸ்பேஸ் தனியாா் நிறுவனத்தின் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.
‘புளோ கோஸ்ட்’ என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து பாா்த்தால் தென்படும் நிலவின் பெரும் பள்ளத்தில் ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் அனுப்பப்பட்ட அந்த விண்கலம், கடந்த இரண்டு வாரங்களாக நிலவைச் சுற்றி வந்தது. இந்நிலையில், அந்த விண்கலம் சுமுகமாக நிலவில் தரையிறங்கியுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் தனியாா் நிறுவனங்கள் கூட்டு சோ்ந்து மேற்கொள்ளும் திட்டங்களில் ஒன்றாக ‘புளோ கோஸ்ட்’ விண்கல திட்டம் திகழ்கிறது.
கடந்த ஆண்டு பிப். 22-ஆம் தேதி அமெரிக்காவின் இன்டியுடிவ் மெஷின்ஸ் நிறுவனத்தின் ‘ஒடிஸியஸ்’ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. இதுவே நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் முதல் விண்கலமாகும்.