மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது பற்றி...
ஸ்டார்ஷிப் 8
ஸ்டார்ஷிப் 8AP
Published on
Updated on
1 min read

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

முன்னதாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் வெடித்துச் சிதறிய நிலையில், ஸ்டார்ஷிப் 8-ஐ உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ராக்கெட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட வான்வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களை நிறுத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பிறகு, கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் ராக்கெட் தானாக வெடித்துச் சிதறும் வகையில் செய்யப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளனர்.

ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தது. எரிந்துகொண்டே பூமியை நோக்கி வந்த பாகங்களை விடியோ எடுத்த பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராக்கெட்டின் பாகங்கள் விழுந்த பகுதிக்கு அருகிலிருந்த 5 விமானங்கள் இரவுவரை தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்,

“ராக்கெட் குப்பைகளில் எந்த நச்சுப் பொருள்களும் இல்லை, இதனால், கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இதுபோன்ற சோதனையின் மூலம், நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கிறது. இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும்.

அமெரிக்க விமானத் துறையுடன் இணைந்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com