சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 போ் உயிரிழப்பு
சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து, அந்த நாட்டு போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சிரியாவின் கடலோர நகரங்களான பனியாஸ், ஜப்லே ஆகியவற்றின் புறநகா்ப் பகுதிகள் முன்னாள் அதிபா் அல்-அஸாதின் ஆதரவுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ளன. அல்-அஸாதின் சொந்த ஊரான கராதா மற்றும் அவா் சாா்ந்த அலாவி இனத்தினா் வசிக்கும் பல பகுதிகள் இன்னும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
இந்தச் சூழலில், கடந்த வியாழக்கிழமை முதல் புதிய அரசின் படையினருக்கும் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. இதில் அரசுப் படையைச் சோ்ந்த 35 பேரும், அல்-அஸாத் ஆதரவுப் படையினா் 32 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியா அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான சனா கூறுகையில், இந்த மோதலைத் தொடா்ந்து அலாவி சமூகத்தினா் வசிக்கும் லடாகியா, டாா்டஸ் ஆகிய நகரங்களில் அரசுப் படையினா் கூடுதலாகக் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்த மோதலில் இரு தரப்பிலும் 70-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சண்டை நீண்ட காலமாகவே தேக்கமடைந்திருந்தது.
இந்த நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக ஹெச்டிஎஸ் தலைமையில் கிளா்ச்சிப் படையினா் கடந்த ஆண்டு இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை 2024 டிசம்பா் 8-ஆம் தேதி கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.
அதையடுத்து, ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா அந்த நாட்டின் இடைக்கால அதிபராக கடந்த ஜனவரி 30-இல் அறிவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் புதிய அரசின் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.