சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியான்
சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியான்

சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்: பாதுகாப்பு அமைச்சகம்

சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிா்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியான் தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டு சீனாவின் பாதுகாப்புத் துறை செலவினத்துக்கு 1.78 டிரில்லியன் யுவான் (சுமாா் ரூ.21.70 லட்சம் கோடி) ஒதுக்கப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சீன பிரதமா் லீ கியாங் கடந்த புதன்கிழமை அறிவித்தாா். இது முந்தைய ஆண்டு அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீதம் அதிகம்.

இதுதொடா்பாக அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிா்கொள்கிறது.

இதன் காரணமாக நிகழாண்டு சீன பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, ராணுவப் பயிற்சியை மேம்படுத்துதல், தேசப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ சீா்திருத்தம் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

அமெரிக்கா போன்ற மிகப் பெரிய ராணுவ சக்தி கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீன பாதுகாப்புத் துறைக்கு செலவிடப்படும் நிதி குறைவாகவே உள்ளது’ என்றாா்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு 895 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.78 லட்சம் கோடி) நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்தது. இதற்கு அடுத்தபடியாக பாதுகாப்புத் துறைக்கு பெருமளவு நிதி ஒதுக்கும் இரண்டாவது நாடாக சீனா உள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில், தமது பாதுகாப்புத் துறைக்கு செலவிடப்படும் நிதி குறைவாகவே உள்ளது என்று சீனா தெரிவித்தாலும், பாதுகாப்புத் துறைக்கான அந்நாட்டின் செலவினம் இந்தியாவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை செலவினத்துக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சீன பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு குறைவாகும்.

X
Dinamani
www.dinamani.com