
ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் நாளை பூமிக்கும் திரும்பவிருக்கும் நிலையில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள் பற்றி கவலை அதிகரித்திருக்கிறது.
நாளை பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர்கள் புறப்பட்டு பூமியை அடைய மார்ச் 19 அல்லது 20ஆம் தேதி கூட ஆகலாம் என்கின்றன தகவல்கள்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.
இந்த டிராகன் விண்கலத்தில் தற்போது சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷிய நாடுகளைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்களுக்கு சில பயிற்சிகளை அளித்த பின்னா், சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோருடன் மேலும் 2 விண்வெளி வீரா்கள் நாளை பூமி திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மிக நீண்ட காலமாக அவர்கள் விண்வெளியில் இருப்பதால், மனித உடல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும். அதாவது, விண்வெளியில் புவிஈர்ப்பு சக்திஇல்லாததால், மனிதர்களுக்கு எலும்பு அடர்த்தி குறையும், தசைகள் தளர்ச்சியடையும், கண் பார்வை பிரச்னை ஏற்படலாம், கண் நரம்புகளில் அழுத்தம் போன்றவையும் அவர்கள் பூமிக்குத் திரும்பும்போது ஏற்படும்.
இந்த பிரச்னைகளால், அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாது, அவர்களது உடல் புவிஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து சமநிலையில் நிற்க முடியாமல் அவதிப்படும். இதனால் அவர்களால் நடக்கவும் முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதெல்லாம் சில நாள்களுக்கு தற்காலிகமானதுதான் என்பதும் சில பயிற்சிகள் மூலம் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அதிக நாள்கள் விண்வெளியில் இருந்ததால், அதிகப்படியான ரேடியேஷன் காரணமாக விண்வெளி வீரர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாகவும், சிலருக்கு மனநிலை பிரச்னை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதிக நாள்கள் இயல்பு வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதாலும், தனிமையும் சில மனநலக் குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை (மாா்ச் 19) அல்லது அதன் பிறகு 4 வீரா்களுடன் சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுவிக்கப்படும் டிராகன் விண்கலன், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
எப்போது சென்றார்?
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.
ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.