இயக்குநர் ஹம்தன் பலால்
இயக்குநர் ஹம்தன் பலால்

ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநரைக் கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.
Published on

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஒருவரை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் குடியேறிய இஸ்ரேலியர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

சிறந்த ஆவணத் திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் விருதை வென்ற ‘நோ அதா் லேண்ட்’ படத்தை யுவால் ஆபிரஹாம், பசெல் ஆட்ரா, ஹம்தன் பலால், ராச்செல் ஸோர் ஆகிய 4 பேர் இணைந்து இயக்கினர். இதில், யுவால் இஸ்ரேலைச் சேர்ந்த பத்திரிகையாளர்.

2019 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் படமாக்கப்பட்ட இந்தப் படம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு பாலஸ்தீன சமூகத்தின் அழிவைக் காட்டியது. இஸ்ரேல் அந்த இடத்தை தாக்குதல் மண்டலமாக அறிவித்த பின்னர் அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்தது பற்றி பேசிய இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இப்படத்தின் 4 இயக்குநர்களில் ஒருவரான ஹம்தன் பலால் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தால் நேற்று கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருடன் சேர்த்து, 3 பாலஸ்தீனர்கள் சூசியா என்ற கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ராணுவ முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இயக்குநரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

பலால் கைது செய்யப்பட்டபோது அங்கிருந்த மற்றொரு இயக்குநரான பசேல் அட்ரா கூறுகையில், “20-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கிராமத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்தும், துப்பாக்கிகளை ஏந்தியும், இஸ்ரேல் ராணுவ உடையிலும் இருந்தனர்.

இங்கு வந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் பாலஸ்தீன மக்களை மிரட்டினர். அவர்களுடன் இருந்த மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இயக்குநர் ஹம்தன் பலாலை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் இஸ்ரேல் ராணுவம்
இயக்குநர் ஹம்தன் பலாலை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் இஸ்ரேல் ராணுவம்

நாங்கள் ஆஸ்கர் விருது வென்று திரும்பிய நாள் முதல் தினமும் இங்கு எங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. படம் எடுத்ததற்காக எங்களை அவர்கள் பழிவாங்குவதைப் போல இருக்கிறது. இது எங்களுக்கு தண்டனையைப் போல உணர்கிறோம்” என்றார்.

இஸ்ரேல் ராணுவம் இந்தக் கைது சம்பவம் குறித்துப் பேசியபோது, “ராணுவ வீரர்களின் மீது கற்களை வீசிய பாலஸ்தீனர்களை நாங்கள் கைது செய்தோம். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் மக்களுக்கு இடையிலான மோதலில் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இஸ்ரேலியரையும் கைது செய்தோம். இஸ்ரேல் போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com