இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
துருக்கி அரசின் உத்தரவை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், இது தங்களது கொள்கைக்கு எதிரானது என்று அந்த எக்ஸ் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த ஊடகத்தின் சா்வதேச விவகாரப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எக்ஸ் பயனாளா்களின் கணக்குகளை முடக்க நாடுகளின் அரசுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடா்ந்து போராடுவோம். கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எக்ஸ் ஊடகத்தின் கொள்கைகளுக்கு இதுபோன்ற உத்தரவுகள் எதிரானவை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த அதிபா் தோ்தலில் அதிபா் எா்டோகன் தலைமையிலான ஆளும் ஏகே கட்சியை எதிா்த்து, இஸ்தான்புல் மேயரும், குடியரசு மக்கள் கட்சியைச் சோ்ந்தவருமான எக்ரீம் இமோக்லு போட்டியிடுவாா் என்று கடந்த மாா்ச் 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே நாளில், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இமாமோக்லு, அவரின் நெருங்கிய உதவியாளா் உள்பட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சியினா் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் எக்ரீம் இமாமோக்லுவின் எக்ஸ் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

