லஷ்கர்-ஏ-தொய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு திட்டம்

லஷ்கர்-ஏ-தொய்பா செயல்பட்டு வந்த இடங்களில் விரைவில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு உறுதி
லஷ்கர்-ஏ-தொய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு திட்டம்
Published on
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் இந்திய படைகள் மேற்கொண்ட அதி துல்லியமான தாக்குதலில் அங்குள்ள 9 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் உள்பட பல்வேறு முக்கியமான பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் ‘ஆபரேஷன் சிந்தூரில்’ கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான ‘லஷ்கர்-ஏ-தொய்பா’வுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ‘முரீத்கே’ பகுதியானது, லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைமையகமாக கருதப்படும் இடமாகும். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரில் இங்குள்ள கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் அரசின் தொழில்துறை அமைச்சரான ராணா தன்வீர் ஹுசைனும், பஞ்சாப் மாகாணத்துக்கான வீட்டுவசதி வாரிய அமைச்சரான பிலால் யாசினும் பயங்கரவாதிகளின் அடைக்கலப் பகுதியான முரீத்கேவுக்கு கடந்த 13-ஆம் தேதி சென்று, அங்கு காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருப்பதுடன், அரசின் செலவில் அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் ‘தி நியூஸ் இண்டர்நேஷனல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்போது பாகிஸ்தான் அமைச்சர் ஹுசைன் பேசுகையில், “பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப்பும் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீரும் தங்களது சொந்த செலவில், இங்கு சேதமடைந்துள்ளதொரு மசூதியை கட்டித் தருவார்கள்” என்று உறுதியளித்திருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன.

அங்கு இந்திய ராணுவ தாக்குதல்களால் சேதமடைந்துள்ள மசூதிகளும் வீடுகளும், பாகிஸ்தான் அரசு செலவில் சீரமைத்து கட்டித் தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் தெரிவித்திருக்கிறார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, “இந்த சண்டையில் உயிர்நீத்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அரசுக்கு இருக்கிறது. இந்த கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

தாக்குதல்களில் காயமடைந்த மக்களுக்கு பாகிஸ்தான் ரூபாயில் ரூ. 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு மொத்தம் 7 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.59,800 கோடி) கடன் அளிக்க சா்வதேச நிதியம் முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்களை பாகிஸ்தானுக்கு சா்வதேச செலாவணி நிதியம் வழங்கியுள்ளது.

இந்தநிலையில், மேற்கண்ட நிதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிலான தொகை பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைகள் எழுப்பத் தவறவில்லை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com