'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!

காஸாவில் உணவின்றி பட்டினியால் தவிக்கும் மக்கள் பற்றி...
gaza
காஸாவில் தனது மகளுடன் குப்பையில் உணவு தேடும் இஸ்லாம் அபு தெய்மா.AP
Published on
Updated on
3 min read

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர், தற்போது தீவிரமாக இருந்து வருகிறது. இஸ்ரேல், காஸா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் காஸா கடுமையாக உருக்குலைந்துள்ளது. மக்கள் பசி, பட்டினியால் தவிக்கின்றனர். காஸாவில் உள்ள குழந்தைகளுக்கு 48 மணி நேரத்தில் உணவு கிடைக்கவில்லை எனில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் அவை கடந்த சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளுக்கு குப்பையில் உணவைத் தேடி கண்டெடுக்கும் புகைப்படம் வெளியாகி மனதை கனக்கச் செய்துள்ளது.

இஸ்லாம் அபு தெய்மா என்ற பெண், காஸா நகரில் இடிந்து விழுந்த ஒரு கட்டடத்தின் அருகில் உள்ள குப்பைக் குவியலில் தேட, ஒரு அட்டைப் பெட்டியில் சிறிதளவு அரிசி சாதம், சில ரொட்டித் துண்டுகள், சிறிதளவு ஒயிட் சீஸ் கிடைத்துள்ளது. அதில் உலர்ந்த ரொட்டித் துண்டுகளை எடுத்து தனது பையில் வைத்த அவர், அதை எடுத்துச் சென்று தன்னுடைய 5 குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

jehad alshrafi

நான் படித்தவள், ஆனாலும் குப்பையிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிடுகிறேன் என்று நினைக்கும்போது வருத்தமாக இருப்பதாக ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அபு தெய்மா கூறுகிறார்.

"நாங்கள் பசியால் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சாப்பிடவில்லை என்றால் இறந்துவிடுவோம் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதுதான் எங்களுடைய அன்றாட வாழ்க்கை" என்று கூறும் அபு தெய்மா, தன் 9 வயது மகளுடன் நகரின் பல்வேறு இடங்களில் குப்பையில் உணவைத் தேடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் மட்டுமின்றி பலரும் தேடுகிறார்கள். சிலர் அவமானம் என்று எண்ணி இருட்டிய பின்னர், குப்பைகளில் உணவைத் தேடி எடுக்கின்றனர்.

jehad alshrafi

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தில் செயலாளராக அபு தெய்மா சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பார்வையற்றோருக்கான பணியாளராகவும் இருந்துள்ளார். அவரது கணவர் ஐ.நா. நிறுவனத்தில் பாதுகாப்புக் காவலராக பணிபுரிந்த நிலையில் 2021 போரில் காயமுற்றதால் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. போருக்கு முன்பே தங்கள் குடும்பம் வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டதாகக் கூறுகிறார்.

அபு தெய்மா தனது குடும்பத்தினருடன் ஷாதி அகதிகள் முகாமில் ஒரு வீட்டில் இருந்த நிலையில், போர் ஆரம்பத்த போது ரஃபா பகுதிக்குச் சென்று 5 மாதங்கள் இருந்துள்ளார். அதன்பின்னர் டெய்ர் அல்-பலா பகுதியில் இருந்து, பின்னர் போர் நிறுத்தத்தின்போது மீண்டும் ஷாதி பகுதிக்கு வந்தபோது வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் வீடு கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அருகில் உள்ள பள்ளியில் அடைக்கலம் புகுந்துள்ளார். பள்ளியில் முதலில் அடைக்கலம் மறுத்த நிலையில் தன் குழந்தைகளுடன் தீவைத்துக்கொள்வதாக மிரட்டியதையடுத்து அவருக்கு இடம் கொடுத்துள்ளனர். காஸா நகரில் உள்ள பல பள்ளிகள், முகாம்களாக மாறியுள்ளன.

jehad alshrafi

"காஸாவில் உணவுகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் அவற்றை பணம் கொடுத்து வாங்க முடியவில்லை, தொண்டு நிறுவனங்கள் பல மக்களுக்கு இலவசமாக உணவளிக்கின்றன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் செல்லும்போது உணவு தீர்ந்துவிடும். அதனால் குப்பைகளில் உணவைத் தேட தள்ளப்படுகிறோம். குப்பைகளில் கிடைக்கும் உணவைச் சாப்பிடுவதால் நோய் பரவும் என்பதைப் பற்றி கவலை இல்லை. ஏனெனில் பட்டினி மிகப்பெரிய நோய்" என்று கூறுகிறார்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி காஸாவுக்குச் செல்லும் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அனைத்து நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியது. ஹமாஸ் வசம் இருக்கும் இஸ்ரேல் நாட்டினரை விடுவிக்கும்பொருட்டு இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட சுமார் 23 லட்சம் மக்கள் பசியால் வாடுகின்றனர். உணவு கிடைக்காமல் தினமும் செத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் நூற்றுக்கணக்கான ட்ரக்குகளில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அவை இஸ்ரேல் ராணுவத்தினரால் சூறையாடப்படுவதாக ஐ.நா. உதவி குழுக்கள் தெரிவிக்கின்றன.

போரில் செத்து மடிவது மட்டுமின்றி காஸா மக்கள் உணவு இல்லாமல் செத்துக்கொண்டிருப்பது உலக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com