

பெய்ஜிங்: விண்வெளியில் சீனாவின் புதிய ஆராய்ச்சிக்காக 4 எலிகளுடன் இளம் வீரர்கள் அடங்கிய குழு விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. கடந்த 2022-இல் கட்டமைக்கப்பட்ட சீனாவின் நிரந்தர விண்வெளி நிலையம் ‘டியாங்காங்க் (சொர்க்க மாளிகை)’ இந்த நிலையத்துக்கான சீனாவின் 7-ஆவது திட்டம் ஆக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது.
சீனாவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டமான ‘ஷென்ஸௌ’-இன் கீழ், அந்நாட்டின் இளம் வீரர் குழு ஷென்ஸௌ-21 விண்கலத்தில் வெள்ளிக்கிழமை(அக். 31) புறப்பட்டு வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இந்தக் குழு சுமார் 6 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி 27 விதமான அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதான இளம் வீரர் வூ ஃபெய் இந்த விண்வெளித் திட்டத்தின் மையப் பொருளாக மாறியிருக்கிறார். அதற்கான முக்கிய காரணம், சீனாவில் எந்தவொரு விண்வெளி வீரரும் இத்தகைய இளம் வயதில் விண்வெளிக்குச் சென்றதேயில்லையாம். அவருடன் ஸாங்க் ஹாங்ஸாங்க்(39) மற்றும் மூத்த வீரரான ‘கமாண்டர்’ ஸாங்க் லூ(48) ஆகியோர் விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
சொர்க்க மாளிகையில் இந்தக் குழு, முந்தைய ‘ஷென்ஸௌ-20’ குழு மேற்கொண்ட ஆராய்ச்சிப் பணிகளைப் பின்தொடர உள்ளது. இதையடுத்து, ‘ஷென்ஸௌ-20’ குழுவினர் விரைவில் பூமிக்குத் திரும்ப உள்ளனர். முன்னதாக, விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த ஷென்ஸௌ-21 குழுவுக்கு முந்தைய குழுவினரால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்ட காட்சிகள் விடியோவாக வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதெல்லாம் சரி... ஷென்ஸௌ-21 குழுவிலொரு அங்கமாக 4 எலிகள் எதற்காக இடம்பெற்றுள்ளன என்பது தெரியுமா?
கருமை நிறத்திலான இந்த எலிகள்(2 ஆண், 2 பெண் எலிகள்) ஆராய்ச்சிப் பணிகளுக்காகவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். பூமிக்கு அப்பால், பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சிக்கு இந்த எலிகள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.