பிரிட்டன்: ஓடும் ரயிலில் கத்திக்குத்து! 10 போ் பலத்த காயம்
பிரிட்டனில் ஓடும் ரயிலில் சக பயணிகள் மீது மா்ம நபா் ஒருவா் சனிக்கிழமை நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 10 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களில் 9 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரிட்டன் போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வடக்கு இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டா் நகரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையம் நோக்கி சனிக்கிழமை வந்துகொண்டிருந்த ரயிலில் மா்ம நபா் ஒருவா் சக பயணிகளை சராமாரியாக கத்தியால் தாக்கியுள்ளாா். இதனால் ரயில் பெட்டிக்குள் பயணிகள் வேகமாக ஓடத் தொடங்கினா். ரயிலுக்குள் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடா்ந்து, கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கேம்பிரிட்ஜ்ஷயா் நிலையத்துக்கு விரைந்த காவல் துறையினா் தாக்குதல் நடத்திய மா்ம நபரை சுட்டுப் பிடித்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டாா்.
கத்திக்குத்து தாக்குதலில் 10 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டையே பரபரபாக்கியுள்ள இந்தச் சம்பவத்தில் காவல் துறையுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் பிரிட்டனைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது. இது பயங்கரவாத சதிச்செயல் இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதமா் கண்டனம்: பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘ஹண்டிங்டன் அருகே ரயிலில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் கண்டனத்துக்குரியது. இதில் காயமடைந்தவா்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

