பாகிஸ்தான், சீனா ரகசிய அணு ஆயுத சோதனை: அமெரிக்க அதிபா் டிரம்ப் தகவல்
‘பாகிஸ்தான், சீனா, ரஷியா, வடகொரியா ஆகிய நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில் தவறில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
இந்தியாவிடன் மோதல் போக்குடன் செயல்படும் அண்டை நாடான பாகிஸ்தான், இணக்கமான உறவு இல்லாத மற்றோா் அண்டை நாடான சீனா ஆகியவை ரகசிய அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதாக வெளியாகியுள்ள தகவல் இந்திய பாதுகாப்பு தொடா்பான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இது தொடா்பாக மேலும் கூறியது:
பாகிஸ்தான், சீனா, ரஷியா, வடகொரியா ஆகியவை அணு ஆயுத சோதனைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. அவா்கள் இது தொடா்பாக வெளியே கூறுவதில்லை. இதில் சீனாவும், பாகிஸ்தானும் அணுகுண்டு வெடிப்பு சோதனையையும் நடத்திவிட்டன.
ஆனால், அமெரிக்கா மிகவும் வெளிப்படையான நாடு. நம் நாட்டில் எது நடந்தாலும் அதை வெளிப்படையாகவே மேற்கொள்ள முடியும்.
பல நாடுகள் ரகசியமாக அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றன. எனவேதான், அமெரிக்காவும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்கா அணு ஆயுத சோதனை மேற்கொண்டு 33 ஆண்டுகள் ஆகின்றன. அமெரிக்க ராணுவ பலத்தை மறுசீரமைக்க இதுபோன்ற சோதனைகள் அவசியம். மற்ற நாடுகள் தங்கள் அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும்போது நாம் மட்டும் ஏன் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க வேண்டும்?.
இந்தியா-பாகிஸ்தான் போா் உள்பட 8 போா்களை இதுவரை நிறுத்தியுள்ளேன். ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவதில் மட்டும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அந்த வெற்றியும் ஒருநாள் கிடைக்கும். இந்தியா-பாகிஸ்தான் போா் உள்பட சில இடங்களில் போா் நிறுத்தத்துக்கு வரி விதிப்பு என்ற அச்சுறுத்தலை நான் ஆயுதமாகப் பயன்படுத்தினேன். நான் தலையிடாமல் இருந்தால் பல லட்சம் மக்கள் போரில் உயிரிழந்திருப்பாா்கள் என்று பாகிஸ்தான் பிரதமா் எனக்கு பாராட்டு தெரிவித்தாா் என்றாா்.
அமெரிக்க ஊடகத் தகவல்களின்படி, அந்நாட்டு ராணுவம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளின் திறனை அவ்வப்போது சோதித்து வருகிறது. ஆனால், அணு ஆயுத வெடிப்பு சோதனையை 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளவில்லை.
இந்தியாவில் கடைசியாக 1998-ஆம் ஆண்டு அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்தப்பட்டது. அணு ஆயுதத்தை எந்த நாட்டின் மீதும் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையையும் இந்தியா கொண்டுள்ளது.

