

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை ரத்து செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி, வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு படிப்புக்காகவும் வேலைக்காகவும் செல்கின்றனர்.
இந்நிலையில் அந்த நாட்டில் உள்கட்டமைப்பு வசதி, உள்நாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் கனடா அரசும் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் கனடாவில் படிப்புக்காக விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சுமார் 74% நிராகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2023ல் நிராகரிப்பு விகிதம் 32% என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் இந்தாண்டு மிகவும் குறைவு. அதாவது 2023 ஆகஸ்ட்டில் 20,900 பேர் விண்ணப்பித்ததாகவும் அதுவே கடந்த ஆகஸ்டில் 4,515 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
படிப்புக்காக என்று கூறி கனடாவுக்குச் செல்ல விண்ணப்பிக்கும் மோசடியும் அங்கு அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023ல் கனடாவில் படிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பங்களில் 1,550 விண்ணப்பங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு 14,000 ஆக இருந்துள்ளது. நடப்பாண்டும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை ரத்து செய்ய கனடா அரசு முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கான சட்ட அங்கீகாரத்தை அந்த அரசு கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.