

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பரிசோதிக்கும் களமாக நவ. 4-இல் நடைபெறும் தேசிய தேர்தல் மாறியிருக்கிறது.
நியூயார்க் சிட்டி உள்பட முக்கிய நகரங்களின் மேயர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை(நவ. 4) நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி காலை 6 மணிக்கு(இந்திய நேரப்படி மாலை 4.30 மணி) தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
இத்தேர்தலில் நியூயார்க் மேயர் பதவியுடன், நியூ ஜெர்ஸி மற்றும் விர்ஜீனியா ஆளுநர் பதவிகளும் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றன. இத்தேர்தலில் அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் தெற்காசிய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாகக் களம் கண்டிருப்பதும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
நியூயார்க் மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் ஸோரான் மம்தானி(34), ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவைவிட தெளிவான முன்னிலை வகிப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிக்காட்டுகின்றன. இதனிடையே, சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஆண்ட்ரியூ கமோவும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் கடும் போட்டியளிக்கிறார்.
தமது தேர்தல் வாக்குறுதிகளால் நியூயார்க் வாக்காளர்களின் கவனம் ஈர்த்துள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஸோரான் மம்தானியின் குழந்தைகளுக்கான இலவச காப்பகம், இலவச பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை நிர்ணயத்தை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் கவனம் ஈர்க்கின்றன. இத்தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமை ஸோரான் மம்தானிக்குச் சேரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.